புகை

நீ
புகைத்து  விடுவதையும்..
புகைக்காத இடைவேளியிளிலும்..
புகைக்கிறது
காற்று..

:)

தொடர்ந்து பிரிதலும்
பிரிந்தும் தொடர்தலும்
காதல்..

கடவுள்களுடனான நேரங்கள்

பயமோ  வெட்கமோ - தன் தாயின் கால்களின் இடுக்கில்
முகம் புதைக்கிறது குழந்தை..யாரும் பார்த்திராத அழகு
இப்படிதான் மறைக்கப்படுகிறது..

பூச்செடி நட குழிதோண்டி
நடாமல் காத்துக்கொண்டிருக்கிறாள் -
மண்புழு கடக்க வேண்டி..

குப்பைத்தொட்டியில் கிடந்த கரடி பொம்மைக்கு
விக்கலெடுத்துக்கொண்டிருந்தது..
அந்த பக்கமாக போன ஏதோ ஒரு குழந்தை
அதை நினைத்துக்கொண்டிருக்கலாம்.

விக்கித்து அழும் குழந்தை
உடனே அழுகையை நிறுத்துகிறது -
அதன் விரலை சப்பக்கொடுத்தவுடன்..

(இன்னும் வரும்..)

அவர்களின் பிரிவு...

கவிதை எழுத எத்தனித்தான்
எதுவும் தோன்றவில்லை
அவனும் எழுதவில்லை..

அவளுடன் கழித்த மாலையை
கவிதையாக்க இயலாதது முரண்..
ஆனால் கவிதையாக இல்லை - அம்மாலை..

பசைவிட்டு போனார்ப்போல் இருந்தது..
வறண்டு நகராமல் போய்க்கொண்டிருந்தது  நேரம்...
தொலைந்தே போயிருந்தது புரிதல்..

எதேர்ச்சயாய் ஏற்பட்ட வேண்டா சந்திப்பைபோல்
'வேறென்ன? வேறென்ன ?' மாறி மாறி ஒலிக்க..
வேறொன்றுமில்லை என்பதை உணர்த்திக்கொண்டிருந்ததன..

அந்த சந்திப்பே நிகழாத மாதிரி இருந்தது இவனுக்கு..
அவளே இல்லாமல் போயிருந்தாள்...
முன்னாட்களின் கவிதையனைத்தும்
அற்ப்பமாய்  தெரிந்தன..

அவளும் அதற்குபின் அழைக்கவே இல்லை..
சொல்லிக்கொள்ளவே இல்லை இருவரும்..
புரிதலின் உச்சமாய் - அவர்களின் பிரிவு...

எப்படி?

ஹனுமனும் சாபம் பெற்றவனே
ராவணனும் வரம் பெற்றவனே
எப்படித்தான் தெரிந்துகொள்வது
யார் கடவுளென்று?