இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்

உச்சிவெயிலில்
சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில்
அலட்சிமாய் ஆகாயம் பார்த்தபடி அவன்..

விரல்களால் தொட்டு தொட்டு நிலாக்களை எண்ணிக்கொண்டிருந்தான்..
இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்  உள்ளதாக சொன்னான்..
சூரியனில்லாத அவன் வானம் குளிர்ந்திருந்தது..
நாளையும் வந்தால் சில மழை மேகங்களை பொம்மையாக்கும் ரகசியத்தை சொல்வதாய் சொன்னான்..
அப்பொழுது தான் தோன்றிற்று,,
எனக்கென ஒரு வானமில்லையென்று

ஆயுள் போதாதெனக்கு,,

கைக்குட்டையை விட்டுச்சென்றதுபோல்
அலட்சியத்துடன்  விட்டுச்சென்றுவிட்டாய் உன் குரலை..
உயிரை இழைத்து இழைத்து காதலாக்கும்
அந்த குரல் - எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது..
குரலுக்கான கண்களை சுழன்று சுழன்று வரைந்துகொண்டிருக்கிறது காற்று..
அந்த கண்களின் வழியே அண்டத்தின் அன்பனைத்தையும்
அனுபவிக்க எத்தனிக்கிறேன்..
ஆயுள் போதாதெனக்கு,,

கூடல்

கருத்து திரண்டிருக்கிறது வானம்.. அனைத்தையும் உள்ளடக்கி..
துளித்து துளித்து தீண்டிக்கொண்டிருன்தது மழை..
மழையை எதிர்பார்த்தபடி அவன்..
நீண்ட தூறல் கணங்களால் ஏக்கம் மேலிட்டது அவனுக்கு..
குடைமடித்து தன் ஆவல் தெரிவித்தான்..
கை நீட்டி தீண்ட எத்தனித்தான்..
தூறல்.. தூறல்..

மேகங்களை இழுத்தனைக்க ஆசை கொண்டான்..
மேல்நோக்கி முகம் காட்ட..
உதடுகளில் துளிகள்..
முத்தங்களில் ஆரம்பித்து மொத்தமாய் அடைமழை...
கைகளை விரித்தவனை முழுவதுமாய் நனைத்தபடி..
அணைத்தபடி..
பெய்தலின் உச்சத்தில்..
எல்லோரும் பாத்தும்
யாருக்கும் தெரியாமல்..
நடந்து முடிந்தது
ஒரு கூடல்..