சிதறும் கரித்துண்டுகள்
அடித்துக்கொள்ளும் நாய்கள்
கனவிலும் வராது
துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டி..

குப்பை பொருக்கிகளின் அறம்

நீங்கள் எத்தனை குப்பைகளை
விட்டுச்செல்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
ப்ளாஸ்டிக் மட்டுமல்ல..
அன்பை விதைக்காத அத்தனையும் குப்பைதான்!

நீங்கள் விட்டுச்செல்லும் எல்லாமே
இந்த பூமியை மலடாக்கிவிடடன
எங்களின் இரைப்பையில் அடைபட்டு
திணற திணற சாகடிக்கின்றன

எங்களின் அடையாளம் என்ன தெரியுமா?
நாங்கள் குப்பை பொருக்கி தலைமுறை..
உங்கள் குப்பைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தவிடாமல்
தசாப்தங்களாய் மண்டிக்கிடக்கும்   நாற்றமிக்க
மக்காத உங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை
தேடித்தேடி எரிக்கும் பொருக்கிகள்..

உங்களின் குப்பைகளுக்கு 
எங்களின் ஒரு தலைமுறையே பலியாகியிருக்கிறது..
பரவாயில்லை..
நாங்கள் எதுவும் புதிதாக செய்யவில்லை..
செய்யவும் முயலவில்லை..
செய்யவும் முடியாது ..
செய்யவும் கூடாது..
நாங்கள் நன்கு அறிவோம் -
வரலாற்றில் எங்கள் பெயர்கள் இல்லாமலே போகும்..

குப்பை பொருக்கிகளுக்கு ஏது வரலாறு?
தூறலை 'தூத்தல்' என்று நீ சொன்னவுடன் 
எனக்கு நீ நண்பனாகிவிட்டாய்.
மழைக்கும் அன்புக்கும்
ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது.

அமைதி

சிகரெட்டின் கடைசி கங்கு
குடைக்கு வெளியே நீட்டி காத்திருந்தான்
மழை பெய்துகொண்டிருக்கிறது

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்

அன்பு செலுத்துவதற்கு மட்டும்
யாராவது சம்பளம் தந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும்

மனித வரலாற்றின்
மிகவும் பழையதொரு பக்கத்தில்
யாரோ ஒரு பாதகன் சொல்லிவிட்டான்
"அவனை விட நான் சீக்கிரமாக
வேலையை முடித்து தருகிறேன்..
எனக்கு அதிக பணம் கொடுங்கள்" என்று.
அவனை அங்கேயே கொன்றிருந்தால்
இப்படியெல்லாம் நேர்ந்திருக்காது.

இப்போது பாருங்கள் -
நம் ஒவ்வொருவரும் ஒரு கடிகாரத்தை
சுமந்துகொண்டு அலைகிறோம் ..


தூத்துக்குடி

என் தமிழ்நாடு என்ற ஒரு நம்பிக்கை இருந்தது
அதில் ஒரு அமைதி இருந்தது
அதில்தான் விழுந்தது உன் முதல் குண்டு.

காந்தியும் பெரியாரும் கலந்து தெளிந்த மக்கள்
அவர்கள் தேர்ந்தெடுத்த இந்த அரசு
எத்தனை தெளிவானதாக இருக்க வேண்டும்?
மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..
நீங்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லையென..
இந்த முற்போக்கான சமூகத்துக்கான தலைமை வகிக்க
நீங்கள் வக்கற்றவர்களென
உங்களுக்கான எங்களின்  கருணையில்தான்
உங்களின் இரண்டாவது குண்டு வெடித்தது..

நாங்களெல்லாம் ஒன்று திரள்வது எதற்காக தெரியுமா?
உங்களின் தவறுகளை சுட்டிக்காட்ட..
நீங்கள் திருத்திக்கொள்ள..
உங்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க.
நன்றாக யோசித்து சொல்லுங்கள்..
ஸ்டெர்லைட் உங்கள் தவறு..
ஜல்லிக்கட்டு உங்கள் தவறு..
விவசாய தற்கொலைகள் உங்கள் தவறு..
பெட்ரோல் விலை உங்கள் தவறு..
காவிரி உங்கள் தவறு..
இன்னும் நிறைய..
தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரு துடிப்பான  சமூகம்..
அவர்களை சுட்டுக்கொள்ளும் ஒரு மலடான அரசு..

தூத்துக்குடியில் சில ஆயிரம் மட்டுமல்ல..
நாங்கள் எல்லா இடத்திலும் உள்ளோம்..
இன்னும் பொறுமையாகத்தான் இருக்கிறோம்..
அவ்வளவுதான் சொல்ல முடியும்..
ஏனெனில் எங்களின் பொறுமை
எங்களுக்கே வெட்கமளிக்கிறது..
உங்களின் ஏதோ ஒரு குண்டு எங்கள் பொறுமையை
கொஞ்சம் உரசித்தான் சென்றிருக்கிறது..


எங்களுடையது
அகிம்சையின் கோபம்
முற்போக்கின் கோபம்
சுயமரியாதையின் கோபம்
தர்க்கத்தின் கோபம்
உங்களுடையது?
அதிகாரத்தின் கோபம்
அடக்குமுறையின் கோபம்
கையாலாகாத அரசின் கோபம்..
எங்கள் பக்கம் ஞாயமிருக்கிறது என்பதை
ஒப்புக்கொள்ள முடியாத அகங்காரத்தின் கோபம்
உங்களுடையது ஒரு கோழையின் கோபம்..
நீங்கள் எங்களின் தலைவர்களாக இல்லை,
சமமான எதிரியாகக்கூட இருக்க
வக்கற்றவர்கள்..

தயவு செய்து விலகிவிடுங்கள்!!