லாபகரமான வாழ்க்கை

காலம், எனக்கான வட்டத்தை
தனது தர்க்தின்  பற்களால்
விழுங்கி விழுங்கி சிதைக்கிறது..
"இதனால் உனக்கு ஏதேனும் லாபம் உண்டா?"
என்று எப்போதும் கேட்க்கிறது.
என் திருமணம்  லாபகரமானது..
என் உறவு லாபகரமானது..
என் நட்பு லாபகரமானது..
என் உதவி லாபகரமானது..
என் தானம் லாபகரமானது..
என் வேலை லாபகரமானது..
என் ஓட்டு லாபகரமானது..
என் குழந்தையின் படிப்பு லாபகரமானது..
நான் லாபத்தினால் மூளைசலவை செய்யப்பட்டுள்ளேன்..
வேறொன்றும் செய்ய முடியாத ஒரு இரவில் 
ஒரு பாடல் கேட்கலாம் என தோன்றியது.
எனக்கு எந்த பாடலை கேட்பதென்று தெரியவில்லை 
ஏனெனில் இசை லாபகரமானது அல்லவே..

தயவுசெய்து கதவை மூடவும்

நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..
நலம் விசாரித்து கொண்டோம்..
குப்பை பைகளை கொண்டுவருவதால் தனக்கு மூச்சடைப்பதாக அது கூறியது ..
பாதியில் மின்தூக்கி நின்றதால் பயந்துபோன ஒரு பாட்டியை நினைத்து வருந்தியது..
சுத்தம் செய்யும்பொது அதன் பொத்தான்களை சரியாக சுத்தம் செய்யவதில்லை என்று வருந்தியது..

தினமும் மூன்றுமுறையேனும்
எங்கள் மின்தூக்கியில்
மேலும் கீழுமாக சென்று வருகிறேன்..
காரணமே இல்லாமல் அதன் கதவுகளை
திறந்தே வைக்கிறேன்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."
மூன்று நொடி நிசப்தம்..
"தயவுசெய்து கதவை மூடவும் .."

கதவை மூடினால் என்ன தருவாய் என்று கேட்டேன்..
என்கள் அந்தரங்கம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது..
நான் எங்கள் மின்தூக்கியிடம் பேசினேன்..


- லாக்டௌன் பக்கங்களில் இருந்து..