வெளி

பரந்து விரிந்த புல்வெளியில்
பார்ப்பதெல்லாம் இலக்கு..
 கடப்பதெல்லாம் பாதை..
இலக்கை அடைந்து திரும்பி பார்த்தல்
கடந்த இலக்கின் அடையாளமில்லை.
சுவாசிப்பதை மட்டுமே உணரும் நொடியில்
வேறொன்றும் தோன்றவில்லை..
எல்லைகள் இல்லாத அந்த வெளியில்
காலமும் இல்லை !!

காதலனாவது எப்படி?

அவளது குறுஞ்செய்தியை, மின்னஞ்சலை எதிர்பார்த்திருப்பாய் - தவறில்லை
ஆனால் அதை அவளிடம் சொல்லி விடாதே..

எல்லாவற்றையும் சொல்லி விடாதே - நண்பனாகிவிடுவாய்!
இல்லாத ரகசியத்தை புன்னகையில் மறைக்கும் பாவனை கற்றுக்கொள்.

உங்களுக்காக கடந்து செல்லும் நொடிகளை கவனி - அப்போது
கண்மொழி பேசு - உடல்மொழி தவிர்.

அவள் கேட்கும் வரை காத்திரு - அவளைப்பற்றியும் காதலைப்பற்றியும்
உன் புரிதலை சொல்ல..

அவளாக கேட்பாளென காத்திருக்காதே - பரிசுகளுக்கும்
முத்தங்களுக்கும்..

எது வேண்டுமுனக்கு?

மனிதனை காதலும் பொருளும் இயங்க வைக்கின்றன..
பொருளின்மேல் காதலாயின் தொலைப்பது மனிதம்..
காதல் மட்டுமாயின் கிடைப்பது வாழ்க்கையின் பொருள்..