ஒட்டுப்பசை

தேம்பி தேம்பி அழுதுகொண்டிருப்பவள்
யாரென்று தெரியவில்லை..
கைத்தொலைபேசியில் யாரிடமோ மன்றாடியபடி
அந்த ரயில் நிலையத்தையே  இரக்கப்பட வைக்கிறது அவள் குரல்..
கண்ணின் மை கரைந்து தீர்ந்து
கண்ணீரும் தீர்ந்துவிடும்  போல்...
விக்கித்து தேம்புகிறது அவளின் ஆற்றாமையும் காதலும்..
அன்றைய இரவில் அவள் உடைந்திருப்பாள்..
அவளின் அறையின் சுவர்களில் எழுதாத குறிப்புகளை
அழிக்க முற்பட்டு தோற்றுப்போய்
நினைவுகளால் வரும்சிறு புன்னகையை மோக்ஷம் கண்டு
பின் துளிர்க்கும் கண்ணீரின் தூய்மையில் பொதிந்திருக்கிறது..
அவளுக்கான ஒட்டுப்பசை..

கருப்பு புகைப்படம்..

ஒரு கருப்பு இரவின் வானத்தை
புகைப்படம்மாக எடுத்து என்னிடம் தருகிறாய்..
புரியாமல் விழிக்கும் என்னைபார்த்து
அதன் அர்த்தம் விளக்க ஆயிரம் சொற்கள் பேசுகிறாய்..
அந்த கதைகளில் கருப்பும் இரவும் நீயும்
வந்து வந்து போகிறீர்கள்..
ரசிக்க தொடங்கிய கணத்தில் நானும் சேர்ந்துகொண்டேன்...
நீ என்னை அதில் வழிநடத்தி செல்கிறாய்..
ஸ்பரிசமும் சொற்களும்  நம்பிக்கையும் நிறைந்த
கருப்பு வெளி அது..
மகிழ் தருணத்தில் உனக்கு சிகப்பு ரோஜாக்களை பரிசளிப்பதுபோல்
இப்பொழுதும் தர எண்ணினேன்...
சிகப்பு ரோஜாக்களை நினைத்தவுடன்
அந்த கதைகளிலிருந்து நான் வெளியே விழுந்துவிட்டேன்..
பலமாய் சிரித்த நீ சொல்கிறாய்
கண்களை மறந்த தியானமே அந்த புகைப்படமென்று..

புகைப்படம்..

பனி சூழ்ந்த மலைமுகட்டின் காட்சியை
ரசித்து ரசித்து கடந்த நொடிகளை..
நான் நினைத்து மகிழவே அந்த புகைப்படம்..
அன்றி..
உங்களுக்கு அது  எவ்வளவு அழகாக தெரிந்தாலும்
அது பிரம்மையே...