தன்னை விளக்க
வார்த்தைகள் தேவைப்படும்போது 
வெட்கப்படுகிறது அன்பு ..
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

என் பேரன்பை சொல்லிவிட எத்தனித்து
நித்தம் எழுதும் கவிதைகள் பத்தவில்லை..
முழு அன்பை நீ உணரும் நாளில்
நம்மிடையே மொழி அழியலாம்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தற்கொலையிலிருந்து பின்வாங்கியவன்

இதயத்தின் கடைசி எண்ணங்களை
கவிதையாக்கி பார்த்தவனுக்கு
வாழ்க்கை பிடித்துவிட்டது..
வார்த்தைகளால் கட்டிக்கொள்ளலாம்..
விடுவிப்பது எப்படி..
கனவுகளை அரங்கேற்றலாம்
நினைவுகளை எப்படி..
மனிதனை சிறைவைக்கலாம்
மனதை எப்படி..
உண்மையென நம்பவைக்கலாம்
உண்மையாய் எப்படி...

ஏதோ ஒரு சொல்லுக்காக துடித்துக்கொண்டிருக்கிறது இன்னொரு சொல்..

ஏக்கத்தின் முழு வடிவம் உன் வயதாக இருக்கலாம்..

கன நேரத்து பார்வையில்தான் எத்தனை கணம்..

ஒரு பொய் கோபத்திலும் ஒரு பொய் மன்னிப்பிலும்
நிஜமான் சந்தோஷம்...
படிப்பார் அற்ற எழுத்து
உழன்றுகொண்டே இருக்கிறது
எல்லோர் மனதிலும்..

யாருக்கென்று தெரியாமல் வரும் கவிதை
இருந்துவிட்டு போகட்டும் 
அற்பத்தின் விதிவிலக்காய்..
உடைந்து விழுந்த வானம் கடலில் ஒரு தீவானது..
அதன் மேகம் பயிரானது..
அதற்க்கான துண்டு நிலா ஒரு பெண் ஆனது..
சேர்ந்து உடையாத சூரியனை அவள் திட்டிக்கொண்டிருந்தாள்..

வேட்டையின்போது தவறிய அம்பொன்று
இன்னும் குத்தி நின்றுகொண்டிருக்கிறது...
கொடிபடர்ந்த அம்பின்மேல் அமர்ந்தது  குருவி
எச்சமிட்டு அம்பின் பாவம் கழுவியது..
நீ என்றாவது ஒரு நாள் கடலை நேசிப்பாய்.
அன்று என் மௌனம் புரியும்..
அதுவரை நானொரு சலசலக்கும் அலை மட்டுமே..
ஆதாம்-ஏவாளுக்கு இடையே 
ஏதோ ஒன்று இருந்திருக்கும்.
அது காதலாகவும் இருக்கலாம்..
உள்ளே  உடையும் வலியை
வெளியில் நின்று  சலனமில்லாமல் 
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்..
பல மாதங்கள் காத்திருந்து காதல் சொன்ன நீ 
என் அறையை சென்றடையும் நேரம் கூட பொருக்க முடியவில்லை..
கூட்டமில்லாத பேருந்தில் ஏதோ அழுந்துகிறது என்னுள்...

கனவின் கூட்டில் ஒரு மாயை 
பாவங்களின் முதலும் முடிவும் அது..

சொல்லின் இறுதியில் உதிரும் மௌனம் 
என்றாவது இன்னொரு சொல் அதனை நிரப்பும்..

உறவின் ரகசிய ஆட்கொள்ளல் 
அதை கொள்ளாமல் இருப்பது இயலாமை..

உந்தன் நிழலோ 
அதன் வடிவோ 
என் செருக்கை கொன்றிடும் 
தழலோ...

வியர்க்கும் நெற்றியோ 
துடைக்கும் அழகோ
கலையும்  பொட்டோ
தொலையும் நானோ..

உன் முரணோ 
என் அதிர்வோ 
சற்றும் எதிர்பாராத புதுப்புது
நீயோ..

உன் பிரிவோ
மகிழ் கனவோ 
வெட்கித்து எழும் 
இரவோ..

இத்தனை நாள்
எப்படி தவற விட்டேன்..
கண்முன்னே சிதறிக்கிடக்கிற கவிதைகளை..

பொறுக்க தோன்றவில்லை.
அழகான குவியலது.
சில செருப்படிகளும் அடக்கம்.

திரும்பி விழுந்த ஒற்றை சருகு 
விரிக்கிறது 
எறும்புக்கான வானத்தை..

குவியலில் எனக்கு தெரிந்ததில் ஒன்று.
உங்களுக்கு தெரியாவிடி வெளி நோக்குங்கள்.
அது வெற்று வெளியல்ல..
அழகின் புதிய வரையறை நீயாகியதால்
எழுதப்படாத சிறந்த தேவதை கவிதை
என்னுள் மட்டுமே இருக்கிறது..


வெட்டிய பார்வைக்கே - ஒரு நொடி 
விட்டுத்துடித்தது இதயம்..
கூறிய கதைகளிலே - மனதில் 
ஊறிய  உன் அபிநயம்..
சட்டென விலகியதால் - உதடுகளில் 
வெட்டப்பட்ட முதல் முத்தம்..
மழை மாலை அணைப்புகளில் - தேநீருடன
அலைபாய்ந்த தருணம்..
ருதுவாகிய பொழுதில் - நீ சிவந்த
ரகசிய கற்பனைகள்...
நீயில்லாத வெறுக்கப்பட்ட கனவுகள்..
விடைபெற அணைத்தபோது - விலகாமல் நின்ற 
மௌன நிமிடங்கள்..
எத்தனை ஞாபகங்களோ - அத்தனையும் 
பித்தனின் பாசுரங்களோ...
ஏரியின் கரையில் எதோ ஒரு  ஓடையின் நீர்
அதில் மிதப்பது எதோ ஒரு  மரத்தின் இலை
காற்றில் மிதந்து இலையில் அமர்வது எதோ பறவையின் இறகு
இதில் யாருக்கு சொந்தம் எனதிந்த மென் புன்னகை..
மூடிய விழிகளுடன் அவன் மரணித்த பின்
விழியோரத் துளியாய் வழிகிறது
மிச்சமிருந்த வாழ்க்கை..
என் கொடூர கனவொன்றை 
நீ பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன்..
ரத்தம் சிந்தி நான் இறக்கும் தருணத்தில்
திடுக்கிட்டு எழுந்தேன்..
கண்களில் நீர் வடிய, என்னை எழுப்பாமல்
அழுகவும் அணைக்கவும் முற்பட்டுக்கொண்டிருந்தாய்..
என் வியர்வையை துடைத்த உன் கைகளின் நடுக்கதிதில்
ஞாபகம் வந்தது மிச்சமிருந்த கனவு..

துளியின் சுமை..

ஒரு பிரிவின் துயரத்தை -
அழுது தீர்ப்பவன் புத்திசாலி..
அல்லாது - நாட்கள் கழித்து
ஒரு சிறு துரும்பினால் ஞாபகப்படுத்தப்பட்டு
பெருகும் ஒரு துளி
கண்ணீரின் சுமை -
முட்டாள்களின் சூத்திரம்..