எந்த தருணத்திலும் பிரிந்து விடலாம் 
என்ற ஒப்பந்தத்துடன் சேர்ந்திருப்பது 
மூச்சு முட்டுகிறது.

நான் டிவி பார்க்கிறேன், நீ பாட்டு கேட்கிறாய் 
நான் தோசை சாப்பிடுகுறேன், நீ ஆர்டர் செய்கிறாய் 
என் கப், உன் கப் 
என் துணி, உன் துணி 
என் பைக், உன் ஸ்கூட்டர் 
என் சாவி, உன் சாவி
என்  வாழ்க்கை, உன்  வாழ்க்கை 
என்னுடன் பகிர்ந்து கொள்ள 
நம் வீட்டில் கழிப்பறையை தவிர 
வேறெதுவும் உன்னிடம்  இல்லை 

ஒரு சிலந்தியின் நேர்த்தியுடன் 
ஒரு நாளை நீ சீராக கடந்து விடுகிறாய் 
ஒரு விடுதி காவலனைப்போல் 
உன் அசைவுகளை நான் குறிப்பெடுக்கிறேன்
எந்த மாற்றமுமின்றி இயந்திர சுத்தத்துடன் நீ இயங்குகிறாய் 
நான் கோவமாய் கத்தினால்  என்ன செய்வாய் - தெரியாது.
நான் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வாய் - தெரியாது.
எனக்கு விபத்தில் கை உடைந்தால் என்ன  செய்வாய் - தெரியாது 
இதெல்லாம் நடக்காமல்  உனது இயந்திரகதியை 
நானும் மிகக்  கவனமாக காத்து வருகிறேன்.

நான் வெடித்து அழுது நிர்வாணமாய் 
உனக்கு முன்னால் நிற்க தயார்தான் 
அப்பொழுதும் நீ  எதுவும் சொல்லமாட்டாய் என்று தெரிகிறது..
என் பயமெல்லாம் ஒன்றுதான் 
"என்ன செய்ய முடியும்.. அழாதே"
என்று பக்கத்துக்கு வீட்டுக்காரனைப்போல்  
நீ சொல்லி விடுவாய் என்பதுதான்..

நேசத்தின் கண்கள் எப்பொழுதும் நீர்த்திருக்கின்றன..

கருத்துகள் இல்லை: