செம்பருத்தியைப்போல் பூத்திருக்கிறது 
தென்னைமர நிழல் 
அதன் மத்தியில் அமர்ந்து 
அசைபோடுகிறது  மாடு 
நிழல் நகர நகர 
மாடும் நகருமா? 
தெரியவில்லை 
ரயில் நகர்ந்து விட்டது 
மீட்சி அடையமுடியாத பெரும் பலூன் 
என்று நம்பியவளுக்கு தெரிந்தது 
அது குட்டி குட்டி பலூன்களால ஆன
ஒரு பெரிய காற்று மூட்டை என்று..
புரிதலற்றுப்போதல் என்பது 
ஒவ்வொன்றாக உடைக்கப்படும் காற்று குடுவைகளே..
காற்றில் கடிவாளத்தை இழுத்து வேகம் செல்லும் 
சிறுவனின் குதிரைதான் அது..
அவளது பறத்தல் 
கீழிறங்கி  அந்தர தொங்கலாக  மாறும் தருணத்தில் 
அவள் தன்  சிறகுகளை  
பிரசவித்துக்  கொண்டிருந்தாள்..

கள்ளம்

குழந்தைக்கு தெரியாமல் சாப்பிடப்படும் சாக்லைட்டுகள் 
தாயிடம் எப்போதும் இருக்கும்தானே..
அந்த கள்ளத்தில் என்னையும் சேர்த்துக்கொள்..
பெருந்துயர் நாளின் உன்னுடைய தூக்கத்தைப்போல  
என்னிடம் நீ வந்து போ..
கோடை பயணத்தில் பழச்சாறுக்காக நிற்பதாக 
எண்ணிக்கொள் 
சில்லிட வைக்கும் சில நொடிகளை ஸ்பரிசித்துவிட்டு 
மீண்டும்  தழலை உடுத்திக்கொள் 

உண்மை மட்டும்  பேசவைக்கும் 
மோஸோ  திரவத்தை பருகியபின் 
ஆணையோ  பெண்ணையோ கேட்டால் 
தங்கள்  ஸ்பரிசிக்க நினைக்கும் 
ஒரு பெயரை சொல்லுவார்கள்..

கேட்பதற்கும்  இங்கு யாருமில்லை..
மோசோவை குடிப்பதற்கும் யாருமில்லை..

நிறைவேறாத மோகமே 
புழுவாக நெளிகிறது..

எல்லா பயணங்களும் 
தேநீர் உடனோ 
தேநீரை நோக்கியோ 
அல்லது தேநீரை நம்பியோ 
வாய்க்க பெருமாயின் 
எந்த குழப்பமும் இல்லை 


உன் உடலில்  நான் கண்டுபிடித்த தழும்பில் 
ஆரம்பிக்கறது இந்த நாளுக்கான ஆராதனை 
புதிய கிளையை கண்டுகொண்ட காட்டு  அணில்  
அதையே   சுத்தி சுத்தி வருகிறது ..  
பசி மீண்டும் மீண்டும் வந்தாலும் 
பழையதென சொல்ல முடியவில்லை   
புதிதான உடலை 
பருகுகிறது கிளர்ச்சி