நீ நாளை திரும்புகிறாய்

நீ நாளை திரும்புகிறாய்
மீன் தொட்டியில் புதிய நீர் மாற்றிவிட்டேன்
நம் படுக்கையின் உறையை மாற்றிவிட்டேன்
ஜன்னல் திரைசீலையின் முடிச்சை அவிழ்த்தாகிவிட்டது
நீ விரும்பும்படி காற்றில் அலைந்தபடி இருக்கின்றன
உன் செருப்புகளுக்கான  இடமும் சரி செய்துவிட்டேன்
கழுவிய பாத்திரங்களை மீண்டும் கழுவி வைத்தாகிவிட்டது
மீசை மட்டும் வைத்து சுத்தமாக மழித்தாகிவிட்டது
மீண்டும் தினமும் பால் பாக்கெட் சொல்லியாகிவிட்டது
"அம்மா திரும்பி வர்றாங்களா?" என்ற அவன் கேள்விக்கு
அசடு வழிய சிரித்தாகிவிட்டது
எல்லாம் முடிந்தது.
அமைதியாக விடைபெறும் இந்த தனிமையை
மென்சிரிப்புடன் வழியனுப்ப இந்த மாலை இருக்கிறது..

குகைக்கு வெளியே இரவுப் புலியின் கர்ஜனை
எண்ணை சொட்டும் தீப்பந்தம்
கடைசி குச்சி

பொறி

விடுவிக்க முடியாத பொறியொன்றில் என் கால்கள்
என் கைகளை பிடித்தபடி அவள்..
"பொறியை விடுவிக்க என்ன செய்யவேண்டும்?" என்று கேட்கிறாள் 
"யாராலும் முடியாது"
"உன் காலை வெட்டட்டுமா?"
"வேண்டாம். என் ஊணம் நம்மிருவரையும் துரத்தும்"
".."
"நீ போய்விடு"
"மாட்டேன்". அவளது  கைகள் இன்னும் அழுத்தி பிடிக்கின்றன.
"மிருகங்கள் வரலாம்"
"பரவாயில்லை"
"பசி உன்னை மாய்த்துவிடும்"
"பரவாயில்லை"
"இதுதான் என் முடிவு. நீ ஏன் இன்னுமிருக்கிறாய்?"
"உன் கடைசி மூச்சுவரை என் கைகள் வெப்பமளிக்கும்"
"பிறகு ?"
".."
"நீ தாராளமாக புதிதாய் தொடங்கலாம்"
"எதை ?"
"உன் வாழ்க்கையை !!"
"இந்த காதலை என்ன செய்ய?"
".."

பற்று

தடக்கும் மின்சார ரயில்
காலியான  ஞாயறு மதியம்
ஊசலாடும் கைப்பிடிகள்