நீ நாளை திரும்புகிறாய்

நீ நாளை திரும்புகிறாய்
மீன் தொட்டியில் புதிய நீர் மாற்றிவிட்டேன்
நம் படுக்கையின் உறையை மாற்றிவிட்டேன்
ஜன்னல் திரைசீலையின் முடிச்சை அவிழ்த்தாகிவிட்டது
நீ விரும்பும்படி காற்றில் அலைந்தபடி இருக்கின்றன
உன் செருப்புகளுக்கான  இடமும் சரி செய்துவிட்டேன்
கழுவிய பாத்திரங்களை மீண்டும் கழுவி வைத்தாகிவிட்டது
மீசை மட்டும் வைத்து சுத்தமாக மழித்தாகிவிட்டது
மீண்டும் தினமும் பால் பாக்கெட் சொல்லியாகிவிட்டது
"அம்மா திரும்பி வர்றாங்களா?" என்ற அவன் கேள்விக்கு
அசடு வழிய சிரித்தாகிவிட்டது
எல்லாம் முடிந்தது.
அமைதியாக விடைபெறும் இந்த தனிமையை
மென்சிரிப்புடன் வழியனுப்ப இந்த மாலை இருக்கிறது..

கருத்துகள் இல்லை: