தாமரை மலரும்
சூரியன் உதிக்கும்
இலை துலிர்க்கும்
குக்கர் விசிலடிக்கும்
கை ஏதோ செய்யும்.
அதெல்லாம் சரி..
படகு எப்போ திரும்பும்?
காவிரி எப்போ திறக்கும்?
விவசாயம் எப்போ செழிக்கும்?
கூவம் எப்போ மனக்கும்?
கீழடி எப்போ திறக்கும்?
டெங்கு எப்போ ஒழியும்?
டாஸ்மாக் எப்போ மூடும்?
தோழனுக்கு எப்போ கோயில் திறக்கும்?
ஜாதி எப்போ ஒழியும்?
நம் தலை எப்போ நிமிரும்?
சோறு எப்போ கிடைக்கும்?

நல்ல வேளை!!

நல்ல வேளை!
நாம்  பார்த்துக்கொண்டு இருக்கும்போதே
 பூக்கள் வாடி வதங்கி கருகி விடுவதில்லை
காலையில்  மலர்ந்திருக்கும் ரோஜா 
நம் வேலைகளையெல்லாம் முடித்து வரும்போது 
மாலையில் வாடியிருப்பது  
எத்தனை சௌகரியமாக இருக்கிறது..
எப்பேர்பட்டது இயற்கையின் கருணை..

சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை
அன்பின் எல்லையை
வலிகள் நிர்ணயிப்பது
அதிசயமாகத்தான் இருக்கிறது..
'இந்த வலியை உன்னிடம் சொல்லி
என்ன ஆகப்போகிறது?'
(அ)
'உனக்கு புரியாது'
(அ)
'உன் கேள்விகளுக்கு என்னிடம் பதிலிருக்காது'
என்று ஏதாவது ஒரு எண்ணம் வரும்பொழுதே
நம் அன்பின் மீது  ஒரு கீறல் விழுந்துவிடுகிறது...
உனக்கு தெரியுமா?
வலிகள்தான் அன்பை கீறுகின்றன
வலிகள்தான் அன்பை குத்தி கிழிக்கின்றன
வலிகள்தான் அன்பை சிதைக்கின்றன

அன்பின் மீதான ஒவ்வொரு வன்முறைக்கும்
நிறைய பேச வேண்டியிருக்கிறது
நிறைய கேள்விகளை எனக்குள் கேட்க வேண்டியிருக்கிறது
உன் எல்லா தர்க்கங்களுக்கும் உண்மையை தேட வேண்டியிருக்கிறது..
என் அடி ஆழத்தின் புரிதலை
கொஞ்சம் புரட்டிப்போட  வேண்டியிருக்கிறது..
அது ஏற்படுத்தும் பூகம்பங்களை
தாங்க வேண்டியிருக்கிறது..
ஏனெனில்.. அன்பு அத்தனை எளிதாக
தன் எல்லையை விரிப்பதில்லை..

அதனால்தான்
சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை.

கோழிப்பண்ணை லாரி
காலியான கூண்டுகள்
மிச்சமிருக்கும்  இறகுகள்

பூனை குட்டியின் நெடுஞ்சாலை நிமிடம்

ஒரு பூனைக்குட்டி நெடுஞ்சாலையை கடக்க பார்க்கிறது
இத்தனை வாகனங்கள் கடப்பதை
கொஞ்சமும் சட்டை செய்யாமல் அது இருக்கிறது..
அதன் தவறாகவே இருக்கலாம்..
இருக்கட்டுமே..
உங்களுக்கென்ன அவ்வளவு அழுத்தம்?
நீங்கள் போட்ட சாலைதான்..
நீங்கள் வடிவமைத்த நகரம்தான்..
நீங்கள் வரைந்த சடடம்தான்...
நீங்கள் நம்பும் சாதிதான், மதம்தான்..
உங்கள் மனிதருக்கான உலகம்தான்..
அதில் ஏன் ஒரு பூனைக்குட்டி பலியாக வேண்டும்?

விஷத்தை மட்டுமே உண்ணும் பெருநாகம் - அவள்

உனக்கான அன்பில்
எனக்குள்  கொஞ்சம் விஷம்
இல்லாமல் இருப்பதில்லை

விஷத்தால் மட்டுமே ஆன
ஒரு குட்டி கிருமி
என்னுள் நெளியத் தொடங்கிவிட்டது

என் கண்ணீருக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
என் ஆசைகளுக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்?' - நீ
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்'? - நான்
ஒரு துளி விஷம்..
உன் தர்க்கங்களின் அநீதிகளில் 
ஒரு துளி விஷம்..
'ஏனென்றால் நீ ஒரு பெண்'
ஒரு துளி விஷம்..

அன்பிற்கு ஏது தர்க்கங்கள்?
'இதற்காக' என்று காரணங்களை தேட விழையாத
ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த பொன்னான  உறவை
நம்மால் எப்படி மீட்க முடியும்?

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்
பிரியாத  என் காத்திருப்பு கூட
மிச்சமிருக்கும் அன்பின் அடையாளம்தான்..
அதற்கான தர்க்கம் எதுவும் என்னிடமில்லை..

மன்னித்து விடு..

என்னுள் இருந்த கிருமி
புழுவாகி, சிறுபாம்பாகி
இப்போது விஷத்தை மட்டுமே உண்டு
வன்மத்தில் திளைத்த
பெரு நாகமென சீறிக்கொண்டிருக்கிறது..

அதன் சீற்றங்களே என்  அசைவுகள்..
அதன் சீற்றங்களே என் கேள்விகள்..
அதன் சீற்றங்களே என் புறக்கணிப்புகள்..
விஷம் கக்கும் என்னை
உன்னால் கொஞ்சமும்  அடக்க முடியவில்லை
எனக்கு புரிகிறது..
உனக்கும் அந்த நாகத்தின் பிம்பம் தெரிய தொடங்கிவிட்டது..
நீ கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்..
எனக்கு புரிகிறது..

மன்னித்து விடு..

அது உன்னை விழுங்கத்தான் போகிறது..
பின் என்னுள் அது வெடித்து 
என்னையும் அது அழிக்கத்தான் போகிறது..

மன்னித்து விடு..

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்..
எனக்குள் இருக்கும் சிறு அன்பின் எச்சமே
எனது இந்த கவிதை..

மன்னித்து விடு..

நிர்வாணம்


எல்லாவற்றையும் களைந்து
நிர்வானமான உங்களை
கண்ணாடி முன் ஒரு முறை பாருங்கள்..
அது நூறு சதவிகிதம் அன்பால்
ஆனதில்லை என்றா சொல்கிரீர்கள்?
கொஞ்சம் நம்புங்கள்..

இப்போது
உங்கள் நாய்குட்டியின்
எஜமானை எடுத்து அணிந்து பாருங்கள்..
அந்த நூறில் ஒரு புள்ளி கூட குறைய கூடாது..
அப்படியானால் அணிந்து கொள்ளுங்கள்..

இப்போது
உங்கள் திருமணத்தை  அணிந்து பாருங்கள்
அந்த நூறில் ஒரு புள்ளி கூட குறைய கூடாது..
அப்படியானால் அணிந்து கொள்ளுங்கள்..

இதேபோல்
உங்கள் மதத்தை, ஜாதியை, நம்பிக்கைகளை
ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக
அணிந்து பாருங்கள்..

எது உங்களுக்குள் இந்த வெறுப்பை விதைக்கிறது?
எது உங்களை அன்பு வழியிலிருந்து
விலகச் செய்கிறது?
அதை அணியாதீர்கள்.. விட்டுவிடுங்கள்..
அது வைரத்தால் ஆனது என்றாலும்
அது உங்களின் அடையாளம் என்றாலும்
அது உங்களின் அடுத்த வேளை உணவை தர துடித்தாலும்
விட்டுவிடுங்கள்..

நம்புங்கள்..
நீங்கள் நூறு சதவிகிதம் அன்பால் ஆனவர்..

ஐன்னலோர ரயில் பயணம்
குளிரும் டிசம்பர் மதியம் 
மஞ்சள் சாமந்தி வயல் கூட்டம்