சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை
அன்பின் எல்லையை
வலிகள் நிர்ணயிப்பது
அதிசயமாகத்தான் இருக்கிறது..
'இந்த வலியை உன்னிடம் சொல்லி
என்ன ஆகப்போகிறது?'
(அ)
'உனக்கு புரியாது'
(அ)
'உன் கேள்விகளுக்கு என்னிடம் பதிலிருக்காது'
என்று ஏதாவது ஒரு எண்ணம் வரும்பொழுதே
நம் அன்பின் மீது  ஒரு கீறல் விழுந்துவிடுகிறது...
உனக்கு தெரியுமா?
வலிகள்தான் அன்பை கீறுகின்றன
வலிகள்தான் அன்பை குத்தி கிழிக்கின்றன
வலிகள்தான் அன்பை சிதைக்கின்றன

அன்பின் மீதான ஒவ்வொரு வன்முறைக்கும்
நிறைய பேச வேண்டியிருக்கிறது
நிறைய கேள்விகளை எனக்குள் கேட்க வேண்டியிருக்கிறது
உன் எல்லா தர்க்கங்களுக்கும் உண்மையை தேட வேண்டியிருக்கிறது..
என் அடி ஆழத்தின் புரிதலை
கொஞ்சம் புரட்டிப்போட  வேண்டியிருக்கிறது..
அது ஏற்படுத்தும் பூகம்பங்களை
தாங்க வேண்டியிருக்கிறது..
ஏனெனில்.. அன்பு அத்தனை எளிதாக
தன் எல்லையை விரிப்பதில்லை..

அதனால்தான்
சில வலிகளை
நான் உன்னிடம் சொல்வதில்லை.

கருத்துகள் இல்லை: