ஒரு பெண் என்பவள்
ஏன் இவ்வளவு பெரிய மலையாய் இருக்கிறாள்
எதிரே இருப்பது ஒரு பெண் என்பதை கடக்க
சகஜமாய் உரையாட
ஒரு ஆண் எத்தனை உணர்வுகளை
கொல்ல வேண்டியிருக்கிறது..
ஆண் ஏன் இத்தனை ஈனமாய் இருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை குழம்பி  இருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை வெட்கப்படுகிறான்
ஆண் ஏன் இத்தனை பயந்திருக்கிறான்
ஆண் ஏன் இத்தனை, இத்தனை, இத்தனை..

ஒரு ஆண் ஏன் இத்தனை பாவமாய் இருக்கிறான் 
உயரமான அப்பாக்கள்
குழந்தையை கைபிடித்து நடத்திச்செல்ல
குனியத்தான் செய்கிறார்கள்

அன்புத்தோட்டா

அன்பை ஒரு தோட்டாவில் அடைத்து சுடுகிறேன்
"உங்கள் பாவங்களையெல்லாம் ரத்தமாய்
உங்கள் உடலே வெளியேற்றும் " என்கிறேன்..
"அப்படியானால் நாங்கள் இனி
நல்லவர்களாக  இருப்போமா?" என்று கேட்கிறீர்கள்.
நான் அவசரமாய் சொல்கிறேன்
"அப்படியில்லை..
இதுவரையிலான உங்களின் பாவக்கணக்கு
நேர் செய்யப்பட்டுள்ளது..
இதன் பிறகு  நீங்கள்தான் மீண்டும் அது
தொடங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்"

உங்கள் முகத்தில்தான் எத்தனை ஏமாற்றம்

புத்தனுக்கும் உங்களுக்கும் எட்டாதூரம்

பூனைக்குட்டியை  ஏன் நசுக்கி கொண்றீர்கள்?
நான்தான் அதற்காக அழுதுவிட்டேனே

மாட்டிறைச்சி சாப்பிடுபவனை ஏன் கொண்றீர்கள்?
நான்தான் அதற்க்கு வருத்தம் தெரிவித்து விட்டேனே

அரிசி திருடியவனை எதற்க்காக கட்டிவைத்து அடித்து கொண்றீர்கள்?
நாங்கள்தான் அதற்க்காக சிறை தண்டனை பெற்றுவிடடோமே

அது சரி.. நீயேன் இத்தனை விசனப்படுகிறாய்
ஏனென்றால் ஒரு உயிரை வாழவைக்கும்
அடிப்படை  அன்புகூட உங்களிடத்தில் இல்லையே ..
உங்களிடத்தில் எப்படி புத்தனை பற்றி பேசுவது?

கழிப்பறையில் புகுந்த பூரான்

வாழ்க்கை முழுதும் திரும்ப திரும்ப போனாலும்
சலிக்காத ஒரு இடம்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு இடம்
என் மீது மதிப்பீடுகள் இல்லாத ஒரு இடம்
யாரும் பார்ப்பதில்லை என்று தெரிந்தும்
தவறுகள் எதுவும் நடக்காத இடம்
இந்த ஈன உடலின் உண்மையை
நாம் பொறுத்துக்கொள்ளும் இடம்

எதையுமே சிந்திக்காத சில நிமிடங்கள்
சிந்தனையில்  நீயில்லை, அவரில்லை, நாடில்லை 
அட நானும் கூட இல்லை..
மெய்யான ஒரு இல்லாமையை வெறிக்கும் ஒரு இல்லாமை 
அப்போது காலருகில் நெளியும்  ஒரு பூரானை 
என்ன செய்ய?
காலியான சிந்தனையில் இப்போது கோபம் மட்டும் 
அத்தனை ஆத்திரம்..
அது பயமில்லை.. கண்டிப்பாக பயமில்லை..
எத்தனை பெரிய விஷ பாம்பாக இருந்தாலும் 
கழிவறையில் புகுந்தால் கோரமாகத்தான் சாகிறது..

ஏன் கழிப்பறை இத்தனை உன்னதமான இடமாக இருக்கிறது?
அல்லது 
இத்தனை உன்னதங்களெல்லாம் கழிப்பறையாக இருக்குமோ?

இரவின் சாலைகள்

சாலையின் ஓரம் இருளில்
ஒரு ஆணும் பெண்ணும்
முகம் மூடியபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்..

நிர்வாணத்தை மறைக்க இருள் தேவை
சிறு முத்தம் அரங்கேற இருள் தேவை
இருவர் பேசிக்கொள்ளவும் இருள் தேவை
இருள் அத்தனை சுதந்திரத்தை தருகிறது

இருளென்பது ஒரு மாய உலகம்
நீங்கள் யாரும் இல்லாத எங்களுக்கான உலகம்
ஒரு சுவிச்ச்சை அனைத்து எங்களால்
அந்த உலகத்துள் நுழைய முடியும்..
எதை அணைத்து நீங்கள் அதில் நுழைய போகிறீர்கள்?

வீடு

எரிமலை பிழம்பிலிருந்து 
ஒரு நதிக்கரையோரம் 
அன்பு சூழ் உலகம் 
சிறிய சுவர்களுக்குள் என்னால் கையாலானவை மட்டும் 
அடிமை படுத்த முடியாத சிறு நாடு 
மகிழ்ச்சியின் கொக்கரிப்பு 
அன்பின் அகங்காரம் 
எங்கும் கிடைக்காத தேங்காய்ப்பூ வடை 
மாதவத்தின் அமைதி 
உறவின் பெறுநதி