கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம்
பார்க்காத
நிலவின் முதுகு
விரட்டிவிடப்பட்ட
பிச்சைக்காரனின் பசி
படகில் செல்பவனுக்கு
கடலை காட்டும் வெளிச்சம்
நேற்று கவனித்த பூவின்
இன்றைய வாடல்
உச்சமடையும் முன்பிருக்கும்
காமத்தின் நித்தியம்
எரிமலைபிழம்பை ஒரு கரண்டி எடுத்து
ஊதி ஊதி உருண்டை பிடித்து - உரமாய் அளிக்கும்
ஆதி தாயின் கருணை
இல்லாத நுண்ணுயிர்கள்
உடலை இல்லாமல் ஆக்கும் நடனம்
ஒரு மழைத்துளி பல இலைகளில் சரிந்து சரிந்து
நிலத்தின் விழுந்து வெடிக்கும் சத்தம்
நீ கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தேவதைகளின்
துர் ஓலம்
உன் இருப்பின்
சகல சாத்தியங்களையும்
உனக்கு காட்டும் பூரணம்
கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக