நான் ஒரு பென்சிலை திருடினேன்.
எனக்கு மூன்று நொடிகள் போதுமானதாக இருந்தது
ஆனால் அந்த திருட்டு அத்தனை சீக்கிரம் நடக்கவில்லை
திருட்டு என்பது வெறும் ஒரு செயல் இல்லை.
தனக்கு சொந்தமில்லாத பொருளின் மீது, ஒரு கள்ளத்தை
'ஆசை' என்று விதைக்க வேண்டும்
அடுத்தவரிடம் இந்த ஆசையை மறைத்து வைக்க
மனது புத்திக்கு சொல்கிறது - இது 'ரகசியம்' என்று
அந்தபென்சில் தனதென நினைத்து
குதியாட்டம் போடும் மனம் - ஒரு மாய உலகை உருவாக்குகிறது
அதில் நானும் அந்த பென்சிலும் மட்டும் இருக்கிறோம்.
இதுதான் என்னுடைய பென்சில்-வெர்ஸ்
எனக்கு அந்த பென்சில் மீது பற்றுதல் இல்லை
என்று ஒரு பாசாங்கை அரங்கேற்ற வேண்டும்
என் வாழ்வின் சில நிமிடங்கள் அந்த பென்சிலுக்காக
இப்படி போலியாக வாழ வேண்டும்.
அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த
அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கண்காணித்து
என்மீதிருக்கும் அவர்களின் நம்பிக்கையை
தவறாக பயன்படுத்தும் துரோகத்தை செய்ய வேண்டும்
திருட்டு நடந்த இடம், நேரத்தில் நான் அங்கு இல்லையென்று
ஒரு alibi-யை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும்
இத்தனையையும் நிகழ்த்திய பின்னர்
இதெல்லாம் அந்த பென்சிலுக்கான உழைப்பென்று
மனம் நம்பி விடும்
அந்த மூன்று நொடிகள் வந்து விட்டன..
பதற்றம் இல்லாமல் இல்லை
எல்லாம் சதியின் படி சரியாக இருக்கிறது..
பின்வாங்க எந்த அவசியமும் இல்லை
எனதாகப்போகும் அந்த பென்சிலை பார்க்கிறேன்
ஒரு பெரும் பூதமென உருமாறி அது சொல்கிறது
"நான் உன் உடைமை அல்ல" என்று.
அந்த பென்சில் பூதத்திற்கு என் முகம் தான்..
ஒரு கசப்பு மேலெழுகிறது
நா வற்றல்
வேர்க்கிறது
மனம் சொல்கிறது "இதற்காக எத்தனை உழைத்திருக்கிறாய்.."
ஒரு பெருமூச்சின் இழுவையில் அந்த பூதத்தை சிதைக்கிறேன்
அது ஒரு பாய்ச்சலுக்கான கணம்
வெடுக்கென அந்த பென்சிலை எடுக்கிறேன்
மனம் பேரின்பம் கொள்கிறது
பெரிய சாதனை
திரும்பி நடக்கிறேன்
கசப்பு பரவுகிறது
உடலில் சிறு கீறல்
நான் நீங்கள் நினைக்கும் நான் தான்
கள்ளத்தின் சிறு கறை மட்டும் சேர்ந்திருக்கிறது
மற்றபடி நான் நானேதான்.
இன்னும் ஒரு உண்மையையும் சொல்கிறேன்
இந்த சதியின் ஒவ்வொரு படியிலும்
ஆசை, துரோகம், பாசாங்கு, களவு என எல்லா படியிலும்
"இதை செய்யாதே.. இதை செய்யாதே.." என்று கதறியது ஒரு குரல்..
அது யாருடையது என்று தெரியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக