விடியாத காலையால் மக்கள் பெரும் கோபமுற்றனர்.
சூரியன் ஏளனமாய் சிரித்தது..
இத்தனை நாள் தவறாமல் விடிய வைத்தவனுக்கு
ஒரு நன்றி உண்டா?
ஒரு கரிசனம் உண்டா?
சிறிது நேர உரையாடல் உண்டா?
வியர்வையைத் துடைக்க ஒரு துண்டு உண்டா?
ஒரு மூலையில் உதித்து இன்னொரு மூலையில் மறையும்
பைத்தியம் தானே நான்?
எனக்கு இன்றைக்கு உதிக்க மூட் இல்லை..போங்கடா!
விடியா சூரியன் என்று எல்லோரும் அதற்கு பெயரிட்டனர்..
தவறாமல் விடியும் சூரியன் இருக்கும் விண் மண்டலத்துக்கு
எப்படி குடி பெயர்வதென ஆராய்ச்சி தொடங்கியது..
சூரியன் ஒரு அவசிய தேவை இல்லையென்று கோட்பாடுகள் உருவாகின.
சூரியன் விழித்து கொண்டது.
அதன் பின் ஒரு நாளும் அது விடிய தவறவில்லை
மிக மென்மையான கதிர்களை மட்டுமே அது பரப்பியது..
முதல் கதிர் விழும் போதே "காலை வணக்கம்" என்று சொல்லும் கதிர்கள்.
ஆம் சத்தம் எழுப்பும் கதிர்களை சூரியன் தந்தது..
பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன..
இப்போதும் "காலை வணக்கம்" கதிர்கள் இருக்கின்றன..
ஆனால் எதனாலோ அது இன்னும்
விடியா சூரியன் என்றே அழைக்க படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக