தோற்றுப்போன போரிலிருந்து 
ஊர் திரும்பும் கடைநிலை போர் வீரன் 
உலர்ந்த பசியேறிய பயணத்தில் 
தன் பொறுப்புகளை பட்டியலிட்டுக்கொள்கிறான் 
தங்கள் தளபதி  வீழ்ந்ததை 
வீரத்தோடு சொல்லும் காட்சிகளை குறித்துக்கொண்டான்.
காயமடைந்தவர்களை தூக்கி சென்றதில் அவன்மேல் அப்பிய 
ரத்த கறைகள் போதுமானதாக இருக்கிறன..
இறந்தவானின்  வாளை யாருக்கும் தெரியாமல்  
மாற்றியாகி விட்டது. அதிலுள்ள ரத்தமும் இவன் வீரம் சொல்லும்.
இரண்டு வீரர்களின் கடைசி சொற்களை 
அவரது குடும்பங்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.
வீட்டுக்கு போகும் முன் கடையிலிருந்து ஒரு மிட்டாய் பொட்டலம் 
கண்டிப்பாக வாங்க வேண்டும்.

பூரணம்

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

பார்க்காத 
நிலவின் முதுகு 

விரட்டிவிடப்பட்ட 
பிச்சைக்காரனின் பசி 

படகில் செல்பவனுக்கு 
கடலை காட்டும் வெளிச்சம் 

நேற்று கவனித்த பூவின் 
இன்றைய வாடல் 

உச்சமடையும் முன்பிருக்கும்  
காமத்தின் நித்தியம்  

எரிமலைபிழம்பை  ஒரு கரண்டி எடுத்து 
ஊதி ஊதி உருண்டை பிடித்து - உரமாய் அளிக்கும்  
ஆதி தாயின் கருணை 

இல்லாத நுண்ணுயிர்கள் 
உடலை இல்லாமல் ஆக்கும் நடனம் 

ஒரு மழைத்துளி பல இலைகளில் சரிந்து சரிந்து 
நிலத்தின் விழுந்து வெடிக்கும்  சத்தம் 

நீ கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தேவதைகளின்
 துர் ஓலம் 

உன் இருப்பின் 
சகல சாத்தியங்களையும் 
உனக்கு காட்டும் பூரணம் 

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

அரப்பு

பனி பொழியும் குளிர்ந்த மாலையில் 
சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி 
என் அம்மாவின் அரப்பு கலர்  புடவையை அணிந்திருக்கிறாள். 
நீண்ட கயிற்றில் இழைகள் பிரித்து பிரித்து 
முடுச்சிட்டு கொண்டிருந்தாள் 
எதற்கும் பிறழாத அவளது உலகம் 
முடுச்சுகளால் நிரம்பியிருக்குமென நினைக்கிறேன் .
பட்டு, ஜரி, காட்டன், வாயில் என தரம் பிரித்து 
பகிர்ந்து கொள்ளப்பட்டவைகளில் 
கைகள் மாறி மாறி 
இவளை அடைந்திருக்கும்  
கழித்து கட்டப்பட்ட இந்த அரப்பு கலர் - 
இழப்பை துளிர்க்கச்செய்கிறது 


வெயில் கவிதை

பந்தை  எடுத்த சிறுவன் 
கூடவே உருண்டுவந்த அதன் நிழலை 
தேடிக்கொண்டிருக்கிறான் 
யாருமில்ல்லாத அந்த ரயில் நடைமேடையின் 
கடைசி பெஞ்சின் மங்கிய வெளிச்சத்தில்  
ஒரு ஆணும் பெண்ணும்
கொஞ்சமாய் சிரித்தபடி அமர்ந்திருந்தனர்.
அவர்களின் பேரொளியை  
வேகமாய் கடந்த ரயிலில் இருந்த 
தரித்திரத்தை வெறித்திருந்தவன் 
தரிசித்து தூங்கச்சென்றான்.
என் விஸ்கிக்கான 
மீன் துண்டுகளில் 
முள்ளில்லாத பாகங்களை 
யார் எடுத்து வைப்பது 
நீ இல்லாமல் 
ஜன்னலோர ரயில் பயனத்தில்
தூரத்தில் வலையும் பாதை.  
வேறு ஒரு ரயிலை பார்பதுபோல் 
என் ரயிலயே நான் பார்க்கிறேன்
அடர் இருள்
மரங்களின் ஊடாக  தெரியும் நிலவு
நிழல் விழாத வெளிச்சம்
குளிர் நடுங்கம் அதிகலையில் நாய்கள் குறைத்து துரத்த
வேறு இடம் நகரும் பைத்தியக்காரன் 
தன் கம்பலியை அகல விரிது 
இன்னும்  இருக்கமாக சுத்திக்கொண்டு 
இதம் அடைந்தான்
இழவுக்கு போகிர விழியில்தான்
தோகை விரித்தாடுகிறது 
மனம்
கவிதை கொஞ்சும் வாழ்கையில் 
சிலநொடிகளே வரும் தரித்திரத்தின் பய்ச்சல்
 நல்லதொரு கவனசிதரல்
உறை போட இரவல் வாங்கிய 
கெட்டித்தயிர் 
எங்கள் வீட்டின்  நீர்த்த பாலுடன் 
கூட மறுக்கிறது.
 அதி வேகமாக சென்றுகொண்டிருந்தேன்  
நாயொன்று சாலையில் நடுவே  வந்துவிட்டது 
நான் திடுக்கிட்டு தடத்தை மாற்ற முற்பட்டேன் 
அந்த நாயும் பதறி திணறியது 
எங்களின்  பயந்த கண்கள் சந்தித்து கொண்டன 
அது மிகுந்த நம்பகத்துடன் நகராமல் நின்றது 
 

 ஒரு கோடைகால பூவை 

யாரும் பார்க்காமல்தான் கிடக்கிறார்கள்.

ஒரு நாய் அதனை முகர்ந்து  

அடுத்து இருக்கும் மரத்தில் 

தன்  வேலையை முடிக்கிறது. 

சோகத்தை மறைக்காதே நண்பா

 அவள்தான் முதலில்  பிரிவை அறிவித்தாள் 
அது ஒரு பேரிடியாய் இருக்குமென்று இவன் எண்ணினான் 
அழ முற்பட்டான் 
தலை சுற்றல் எதுவும் இல்லை.
எதிர் வந்த லாரியை பார்த்து தற்கொலை செய்ய வேண்டுமா 
என்று அவனே கேட்டு..ச்சீ  என்று விட்டுவிட்டான்..
அவள் பிரிந்ததை விடவும் 
அந்த பிரிவு எந்த ஒரு பெரிய சோகத்தையும் 
அவனுக்கு தரவில்லை என்பது வெறுப்பாய் இருந்தது.
உணவு, உடை, உறக்கம், மணம், சுவை எல்லாம் 
சரியாக வேலை செய்தது..
நண்பர்களிடம் சோகமாக முகத்தை வைத்து கொண்டான் 
அவர்களின் ஆறுதல்களை ஏற்றுக்கொண்டான்
தன்னை மறந்து கொஞ்சம் சிரித்துவிட்டாலும் 
நண்பன் சொன்னான் "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..

அவன் பார்த்த திரைப்படங்கள், கதைகள், கவிதைகள்
எல்லாவற்றையும் திட்டினான்..
சத்தமாய் கத்தினான் - காதல் என்பது 
இந்த உலகமே ஏற்றுக்கொண்ட பெரும் பொய்..
நண்பன் மீண்டும் சொன்னான்  "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..
"நீ காதலித்திருக்கிறாயா?" 
"ஆம்..மூன்று முறை.." என்றான் நண்பன்.
"பிரியும்போது உனக்கு சோகமாக இருந்ததா?" 
"பெரிதாக இல்லை" 
"அப்போ எல்லாம் போய் தான?" - இவன் சொன்னான்.
"அப்போ சேர்ந்திருந்தப்போ நீ சந்தோஷமா இல்லையா?" நண்பன் கேட்டான்.
"இருந்தேன்.." 
"அப்போ அது உண்மையில்லயா ?" 
".."

இப்போது இவன் 
சேர்ந்திருக்கும்போது சந்தோஷத்தை தருகிற 
பிரியும்போது சோகத்தை தராத 
தனது அடுத்த காதலுக்காக 
காத்திருந்தான்..

எந்த தருணத்திலும் பிரிந்து விடலாம் 
என்ற ஒப்பந்தத்துடன் சேர்ந்திருப்பது 
மூச்சு முட்டுகிறது.

நான் டிவி பார்க்கிறேன், நீ பாட்டு கேட்கிறாய் 
நான் தோசை சாப்பிடுகுறேன், நீ ஆர்டர் செய்கிறாய் 
என் கப், உன் கப் 
என் துணி, உன் துணி 
என் பைக், உன் ஸ்கூட்டர் 
என் சாவி, உன் சாவி
என்  வாழ்க்கை, உன்  வாழ்க்கை 
என்னுடன் பகிர்ந்து கொள்ள 
நம் வீட்டில் கழிப்பறையை தவிர 
வேறெதுவும் உன்னிடம்  இல்லை 

ஒரு சிலந்தியின் நேர்த்தியுடன் 
ஒரு நாளை நீ சீராக கடந்து விடுகிறாய் 
ஒரு விடுதி காவலனைப்போல் 
உன் அசைவுகளை நான் குறிப்பெடுக்கிறேன்
எந்த மாற்றமுமின்றி இயந்திர சுத்தத்துடன் நீ இயங்குகிறாய் 
நான் கோவமாய் கத்தினால்  என்ன செய்வாய் - தெரியாது.
நான் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வாய் - தெரியாது.
எனக்கு விபத்தில் கை உடைந்தால் என்ன  செய்வாய் - தெரியாது 
இதெல்லாம் நடக்காமல்  உனது இயந்திரகதியை 
நானும் மிகக்  கவனமாக காத்து வருகிறேன்.

நான் வெடித்து அழுது நிர்வாணமாய் 
உனக்கு முன்னால் நிற்க தயார்தான் 
அப்பொழுதும் நீ  எதுவும் சொல்லமாட்டாய் என்று தெரிகிறது..
என் பயமெல்லாம் ஒன்றுதான் 
"என்ன செய்ய முடியும்.. அழாதே"
என்று பக்கத்துக்கு வீட்டுக்காரனைப்போல்  
நீ சொல்லி விடுவாய் என்பதுதான்..

நேசத்தின் கண்கள் எப்பொழுதும் நீர்த்திருக்கின்றன..

வளர்ப்பு

என் குழந்தை இப்படி சொன்னாள் -
"நான் பெரிய பொண்ணா வளர்ந்து 
பெரிய அக்கா மாதிரி ஆயுடுவேன்.."
"good  girl  பாபா "
"அப்பறமா நான் குறும்பே பண்ணமாட்டேன்..
நீ என்ன அப்போ திட்டவே கூடாது.."
"..."
வளர்ப்பு என்பது என்ன..
நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் 

லாக்டௌன்

பொம்மைக்கடைக்காரரின் குழந்தை 

எதிரில் இருக்கும் தின்பண்ட கடையை 

ஏக்கமாக பார்க்கிறது 

நைந்த  தலையணையை 
கிழித்து உதறினாலும் 
பழைய பஞ்சுகள்  
பறப்பதில்லை