முரண்..

ஏதோ ஒரு கருத்தில் முரண்பட்டு
கணத்த வார்த்தைகளை பரிமாறிக்கொண்டோம்..
பின்வந்த நீண்ட நிசப்தத்தை உடைக்க
கணத்த முத்தங்களை பரிமாறிக்கொண்டோம்..
உயிர் எரிந்து  உடல் உவந்து
நம்மிடையே நம்மை பரிமாறிக்கொண்டோம்..


காலையில் கவனமாய் பொறுக்கிக்கொள்ளவேண்டும்..
சிதறி கிடக்கின்ற  ஆடைகளையும், முரண்பாடுகளையும்..
உனக்கான என் காதலை நான் எழுதியதும் இல்லை...
எழுதப்போவதுமில்லை...
என் கிழவனும் கிழவியும் பரிமாறாமல் வைத்து
வாழ்ந்து முடித்த காதல் போல்..
என் மூச்சுக்காற்றின் வழியே
காற்றில்  கசிந்துகொண்டிருக்கிறது காதல்..
ஒரு நாள் அதுவும் நின்று போகும்..
என் கல்லறையின் மீது பூக்கும் பூவை சுவைக்கும்
தேனிக்கு தெரியும்
உன்சுவை..
மரணத்தை எதிர்னோக்கி வாழ்பவனுக்கு
மரணித்துக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை...

நான்..

உங்களனைவரிடமும் ஒட்டியிருந்த சிறுசிறு என்னை பிய்த்தெடுத்துக்கொண்டேன்..
என்னிடமிருந்த சிறிய உங்களை  வெளியே எறிந்துவிட்டேன்..
நான் என்னால் மட்டுமே ஆனவன்..
பின் தெரிந்தது..
யாருமில்லாத நான் நானில்லை..
என்னிலிருக்கும் நான் மட்டுமே நானுமில்லை..

ஒன்றானவன்..

முட்டிக்கொண்ட மேகங்கள் இல்லாமல் போயின..
மின்னல்களால் வெட்டப்பட்டாலும் -
அப்படியே இருக்கிறது வானம்..
மழை கவிதைகள் ரசிக்க மட்டுமன்று..
சற்று நனையவும் தான்; அதுபோலவே
குழந்தை கவிதைகளும், கடவுள் கவிதைகளும்..
ஒரு துக்க நாளில் பெய்த அடைமழையை  நினைத்து
நான் அழுதுகொண்டிருக்கிறேன்..
இறப்பில் ஏதேனும் அந்தரங்கம் உண்டாயின்
அதை அறிவித்தபடி அது பெய்தது..
அதையறிந்த ஒரே உயிர் நானாகிப்போனேன்...
மன்னிப்பையோ கண்ணீரையோ புரிந்துகொள்ள யாருமில்லை.
அந்த கடைசி ஊர்வளத்தில் நனைந்துகொண்டே
நான்  மழையிடம் அதை முணுமுணுத்தேன்..
அடைமழை தனிந்து ஊசி மழை  என்னை குத்தித்தீர்த்து..
பின் வந்த பேரிடியில் பயந்து விழுந்தேன்..
கரைந்துகொண்டிருந்தன பாவங்கள்..

ஒட்டுப்பசை

தேம்பி தேம்பி அழுதுகொண்டிருப்பவள்
யாரென்று தெரியவில்லை..
கைத்தொலைபேசியில் யாரிடமோ மன்றாடியபடி
அந்த ரயில் நிலையத்தையே  இரக்கப்பட வைக்கிறது அவள் குரல்..
கண்ணின் மை கரைந்து தீர்ந்து
கண்ணீரும் தீர்ந்துவிடும்  போல்...
விக்கித்து தேம்புகிறது அவளின் ஆற்றாமையும் காதலும்..
அன்றைய இரவில் அவள் உடைந்திருப்பாள்..
அவளின் அறையின் சுவர்களில் எழுதாத குறிப்புகளை
அழிக்க முற்பட்டு தோற்றுப்போய்
நினைவுகளால் வரும்சிறு புன்னகையை மோக்ஷம் கண்டு
பின் துளிர்க்கும் கண்ணீரின் தூய்மையில் பொதிந்திருக்கிறது..
அவளுக்கான ஒட்டுப்பசை..

கருப்பு புகைப்படம்..

ஒரு கருப்பு இரவின் வானத்தை
புகைப்படம்மாக எடுத்து என்னிடம் தருகிறாய்..
புரியாமல் விழிக்கும் என்னைபார்த்து
அதன் அர்த்தம் விளக்க ஆயிரம் சொற்கள் பேசுகிறாய்..
அந்த கதைகளில் கருப்பும் இரவும் நீயும்
வந்து வந்து போகிறீர்கள்..
ரசிக்க தொடங்கிய கணத்தில் நானும் சேர்ந்துகொண்டேன்...
நீ என்னை அதில் வழிநடத்தி செல்கிறாய்..
ஸ்பரிசமும் சொற்களும்  நம்பிக்கையும் நிறைந்த
கருப்பு வெளி அது..
மகிழ் தருணத்தில் உனக்கு சிகப்பு ரோஜாக்களை பரிசளிப்பதுபோல்
இப்பொழுதும் தர எண்ணினேன்...
சிகப்பு ரோஜாக்களை நினைத்தவுடன்
அந்த கதைகளிலிருந்து நான் வெளியே விழுந்துவிட்டேன்..
பலமாய் சிரித்த நீ சொல்கிறாய்
கண்களை மறந்த தியானமே அந்த புகைப்படமென்று..

புகைப்படம்..

பனி சூழ்ந்த மலைமுகட்டின் காட்சியை
ரசித்து ரசித்து கடந்த நொடிகளை..
நான் நினைத்து மகிழவே அந்த புகைப்படம்..
அன்றி..
உங்களுக்கு அது  எவ்வளவு அழகாக தெரிந்தாலும்
அது பிரம்மையே...

கடவுளின் பின்குறிப்பு..

நாமிருவரும் பகை கொண்டோம்..
உன்னை அழிக்க என் கடவுளிடம் வேண்டினேன்..
என்னை அழிக்க நீ உன் கடவுளிடம்..
எதுவும் நடக்கவில்லை...
நம்மிடமிருந்து விலகினர் கடவுள்கள்..
தனிமையாலும் காலத்தின் பேயறைகளாலும்
ஒன்று சேர்ந்தோம்..
திரும்பி வந்தனர் கடவுள்கள்..
மீண்டும் பகை கொண்டு வேண்டினோம்..
மீண்டும் விலகினர் கடுவுள்கள் - சிறிய பின்குருப்புடன்..
"எங்களை புரிந்துகொண்டால் நாங்கள் உங்களுக்கு தேவையில்லை"

இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்

உச்சிவெயிலில்
சாலையில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில்
அலட்சிமாய் ஆகாயம் பார்த்தபடி அவன்..

விரல்களால் தொட்டு தொட்டு நிலாக்களை எண்ணிக்கொண்டிருந்தான்..
இருபத்தி மூன்று நிலாக்களும், சில நட்சத்திரங்களும்  உள்ளதாக சொன்னான்..
சூரியனில்லாத அவன் வானம் குளிர்ந்திருந்தது..
நாளையும் வந்தால் சில மழை மேகங்களை பொம்மையாக்கும் ரகசியத்தை சொல்வதாய் சொன்னான்..
அப்பொழுது தான் தோன்றிற்று,,
எனக்கென ஒரு வானமில்லையென்று

ஆயுள் போதாதெனக்கு,,

கைக்குட்டையை விட்டுச்சென்றதுபோல்
அலட்சியத்துடன்  விட்டுச்சென்றுவிட்டாய் உன் குரலை..
உயிரை இழைத்து இழைத்து காதலாக்கும்
அந்த குரல் - எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது..
குரலுக்கான கண்களை சுழன்று சுழன்று வரைந்துகொண்டிருக்கிறது காற்று..
அந்த கண்களின் வழியே அண்டத்தின் அன்பனைத்தையும்
அனுபவிக்க எத்தனிக்கிறேன்..
ஆயுள் போதாதெனக்கு,,

கூடல்

கருத்து திரண்டிருக்கிறது வானம்.. அனைத்தையும் உள்ளடக்கி..
துளித்து துளித்து தீண்டிக்கொண்டிருன்தது மழை..
மழையை எதிர்பார்த்தபடி அவன்..
நீண்ட தூறல் கணங்களால் ஏக்கம் மேலிட்டது அவனுக்கு..
குடைமடித்து தன் ஆவல் தெரிவித்தான்..
கை நீட்டி தீண்ட எத்தனித்தான்..
தூறல்.. தூறல்..

மேகங்களை இழுத்தனைக்க ஆசை கொண்டான்..
மேல்நோக்கி முகம் காட்ட..
உதடுகளில் துளிகள்..
முத்தங்களில் ஆரம்பித்து மொத்தமாய் அடைமழை...
கைகளை விரித்தவனை முழுவதுமாய் நனைத்தபடி..
அணைத்தபடி..
பெய்தலின் உச்சத்தில்..
எல்லோரும் பாத்தும்
யாருக்கும் தெரியாமல்..
நடந்து முடிந்தது
ஒரு கூடல்..

புகை

நீ
புகைத்து  விடுவதையும்..
புகைக்காத இடைவேளியிளிலும்..
புகைக்கிறது
காற்று..

:)

தொடர்ந்து பிரிதலும்
பிரிந்தும் தொடர்தலும்
காதல்..

கடவுள்களுடனான நேரங்கள்

பயமோ  வெட்கமோ - தன் தாயின் கால்களின் இடுக்கில்
முகம் புதைக்கிறது குழந்தை..யாரும் பார்த்திராத அழகு
இப்படிதான் மறைக்கப்படுகிறது..

பூச்செடி நட குழிதோண்டி
நடாமல் காத்துக்கொண்டிருக்கிறாள் -
மண்புழு கடக்க வேண்டி..

குப்பைத்தொட்டியில் கிடந்த கரடி பொம்மைக்கு
விக்கலெடுத்துக்கொண்டிருந்தது..
அந்த பக்கமாக போன ஏதோ ஒரு குழந்தை
அதை நினைத்துக்கொண்டிருக்கலாம்.

விக்கித்து அழும் குழந்தை
உடனே அழுகையை நிறுத்துகிறது -
அதன் விரலை சப்பக்கொடுத்தவுடன்..

(இன்னும் வரும்..)

அவர்களின் பிரிவு...

கவிதை எழுத எத்தனித்தான்
எதுவும் தோன்றவில்லை
அவனும் எழுதவில்லை..

அவளுடன் கழித்த மாலையை
கவிதையாக்க இயலாதது முரண்..
ஆனால் கவிதையாக இல்லை - அம்மாலை..

பசைவிட்டு போனார்ப்போல் இருந்தது..
வறண்டு நகராமல் போய்க்கொண்டிருந்தது  நேரம்...
தொலைந்தே போயிருந்தது புரிதல்..

எதேர்ச்சயாய் ஏற்பட்ட வேண்டா சந்திப்பைபோல்
'வேறென்ன? வேறென்ன ?' மாறி மாறி ஒலிக்க..
வேறொன்றுமில்லை என்பதை உணர்த்திக்கொண்டிருந்ததன..

அந்த சந்திப்பே நிகழாத மாதிரி இருந்தது இவனுக்கு..
அவளே இல்லாமல் போயிருந்தாள்...
முன்னாட்களின் கவிதையனைத்தும்
அற்ப்பமாய்  தெரிந்தன..

அவளும் அதற்குபின் அழைக்கவே இல்லை..
சொல்லிக்கொள்ளவே இல்லை இருவரும்..
புரிதலின் உச்சமாய் - அவர்களின் பிரிவு...

எப்படி?

ஹனுமனும் சாபம் பெற்றவனே
ராவணனும் வரம் பெற்றவனே
எப்படித்தான் தெரிந்துகொள்வது
யார் கடவுளென்று?

பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

எனக்கும் உனக்கும் உள்ள நேரம்
மூன்றே நிறுத்தங்கள்..
இடைவெளியாய் சில கம்பிகள்..
கைமாறிய சில்லறைகளில் என்  ஸ்பரிசங்கள்..
திரும்பிய பயனசீட்டுகளில் உன் வெட்கங்கள்..

நான் ஏறும்பொழுதில் உன் ஓரக்கண் பார்வை..
பூக்கடை நிறுத்தத்தில் மலர்ந்து விடைகொடுப்பாய்..
அந்த ஒரு நாளில் ஒரு நிறுத்தம் முன்னதாக ஏறி
காதலை சொன்னேன்..
ஒரு நிறுத்தம் தள்ளி இறங்கி
சம்மதம் சொன்னாய்..

நீ ஓயாமல் பேசிய பெண்மணி
என் மதனி என்று ஜாடை காட்ட - உன் நாணத்தில் உடைந்தது
நம் குட்டு..
இன்று ஒரே நிறுத்தத்தில் ஏறும் நாம்
புதிதாய் விடப்பட்டிருக்கும் PP வண்டியில் செல்லாது
நம்  பேருந்திலேயே தொடர்கிறோம்..
அப்படியே இருக்கின்றன
பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

கதை... கவிதை...காவியம்..

ஒவ்வொரு துளியும் ஒரு கவிதை
நதியின் பாதையில் பல சிறுகதைகள்
முடியாத காவியமாய் கடல்..

ஒவ்வொரு பூவும் ஒரு கவிதையாயின்
எழுதப்படாதவை எத்தனை மரங்களின் கதைகள்...?

ஒவ்வொரு பார்வையும் ஒரு கவிதயாயின்
எத்தனைகோடி சிறுகதைகள் நிமிடங்களில்?
உலகமென்னும் காவியத்தை
இயக்கும் சக்தி எதுவாக இருக்கும்?
கடவுளேன்பார்,  அன்பென்பார் - நான் சத்தியமென்கிறேன் ..

மழையின் அடையாளங்கள்...

மழை மட்டும் பேசிக்கொண்டிருந்த பின்னரவில்..
தூரத்து தெரு விளக்கு நீள்கோடாய் விழுகிறது சாலையின்  மேல்..
அதை  சலனத்துடன் ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது
மழை..

அவசரமாய் நிழல் குடையில் ஒதுங்கியவன்
மழையை திட்டி ஓய்ந்து போனான்...
கைகள் நீட்டி, தூறல் ரசித்து, முகம் கழுவி
திடீரென  இறங்கி நடக்க ஆரம்பித்தான் - அழகாக..

பத்து நிமிடங்களில் நின்று விட்டது மழை -
அடையாளமாய் -
மண் வாசனை..

சாலை குழிகளில் தேங்கினிர்க்கிறது மழைநீர்..
ஒவ்வொரு குழியாய் சென்று கால் நனைக்கும் சிறுமி - கைபிடித்து
இழுத்து செல்கிறாள் அப்பாவையும்..
இதில் யாரழகு ?

நனைய நினைத்தும் முடியாமல் போகிறவர்கள்
மழையை ஸ்பரிசிக்கிரார்கள்
குடை பிடித்துக்கொண்டே ஒரு கை நீட்டி

மழையை தவறவிட்டவர்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடுகிறது
நடைபாதை மரமும்
சிலுப்பிவிட தென்றலும்..

ரகசியம்...

நண்பனிடத்தில் சொல்லும் ரகசியம்
ரகசியமாகவே புதைகிறது..
நண்பனிடமும்  சொல்ல முடியாத ரகசியம்
பாவமாக புதைகிறது..

உள்நாட்டு ரகசியம் 
ஊர் ரகசியம்
தெரு ரகசியம்
வீட்டு ரகசியம்
என்ற பெயரில் சமூகத்தின் அடுக்குகளில்
பாவ மூட்டைகள் பரவி கிடக்கின்றன..
 
ரகசியம் பரிமாறிக்கொள்ளும் கூட்டத்தில்
எல்லோரும் வருகிறார்கள்
முகமூடி அணிந்து...

வெளி

பரந்து விரிந்த புல்வெளியில்
பார்ப்பதெல்லாம் இலக்கு..
 கடப்பதெல்லாம் பாதை..
இலக்கை அடைந்து திரும்பி பார்த்தல்
கடந்த இலக்கின் அடையாளமில்லை.
சுவாசிப்பதை மட்டுமே உணரும் நொடியில்
வேறொன்றும் தோன்றவில்லை..
எல்லைகள் இல்லாத அந்த வெளியில்
காலமும் இல்லை !!

காதலனாவது எப்படி?

அவளது குறுஞ்செய்தியை, மின்னஞ்சலை எதிர்பார்த்திருப்பாய் - தவறில்லை
ஆனால் அதை அவளிடம் சொல்லி விடாதே..

எல்லாவற்றையும் சொல்லி விடாதே - நண்பனாகிவிடுவாய்!
இல்லாத ரகசியத்தை புன்னகையில் மறைக்கும் பாவனை கற்றுக்கொள்.

உங்களுக்காக கடந்து செல்லும் நொடிகளை கவனி - அப்போது
கண்மொழி பேசு - உடல்மொழி தவிர்.

அவள் கேட்கும் வரை காத்திரு - அவளைப்பற்றியும் காதலைப்பற்றியும்
உன் புரிதலை சொல்ல..

அவளாக கேட்பாளென காத்திருக்காதே - பரிசுகளுக்கும்
முத்தங்களுக்கும்..

எது வேண்டுமுனக்கு?

மனிதனை காதலும் பொருளும் இயங்க வைக்கின்றன..
பொருளின்மேல் காதலாயின் தொலைப்பது மனிதம்..
காதல் மட்டுமாயின் கிடைப்பது வாழ்க்கையின் பொருள்..

இன்னும்....

எல்லா மொழிகளும் வர்ணித்து
வார்த்தைகள் தீர்ந்த பின்பும்
இன்னும் மிச்சமிருக்கிறது காதல்...

தலைமுறைகள் அழுது தீர்த்தும்
இன்னும் ஆழ்மனதில் புதைந்திருக்கிறது
இன வெறியின் சோகம்..



உணர்ச்சிகளால் பந்தாடப்படும் மனம்
மரணத்தின் விளிம்பில் கேட்கிறது
இன்னும் ஒரு வினாடி வாழ்க்கை..

தனிமை

செய்வதற்கு எதுவுமில்லாமல் போய்க்கொண்டிருக்கறது முன்னிரவு..
புதைமணலாய் சூழ்ந்திருக்கிறது நிசப்தம்..
நொடிகளாய் உருமாறுகிறது தனிமையின் மூர்க்கம்..
உறவாட ஜன்னலை திறக்கிறேன்...
கைவிடவில்லை இயற்க்கை...