விஷத்தை மட்டுமே உண்ணும் பெருநாகம் - அவள்

உனக்கான அன்பில்
எனக்குள்  கொஞ்சம் விஷம்
இல்லாமல் இருப்பதில்லை

விஷத்தால் மட்டுமே ஆன
ஒரு குட்டி கிருமி
என்னுள் நெளியத் தொடங்கிவிட்டது

என் கண்ணீருக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
என் ஆசைகளுக்கான நிராகரிப்பில்
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்?' - நீ
ஒரு துளி விஷம்..
'எதற்காக நான் உனக்கு இதை செய்ய வேண்டும்'? - நான்
ஒரு துளி விஷம்..
உன் தர்க்கங்களின் அநீதிகளில் 
ஒரு துளி விஷம்..
'ஏனென்றால் நீ ஒரு பெண்'
ஒரு துளி விஷம்..

அன்பிற்கு ஏது தர்க்கங்கள்?
'இதற்காக' என்று காரணங்களை தேட விழையாத
ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த பொன்னான  உறவை
நம்மால் எப்படி மீட்க முடியும்?

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்
பிரியாத  என் காத்திருப்பு கூட
மிச்சமிருக்கும் அன்பின் அடையாளம்தான்..
அதற்கான தர்க்கம் எதுவும் என்னிடமில்லை..

மன்னித்து விடு..

என்னுள் இருந்த கிருமி
புழுவாகி, சிறுபாம்பாகி
இப்போது விஷத்தை மட்டுமே உண்டு
வன்மத்தில் திளைத்த
பெரு நாகமென சீறிக்கொண்டிருக்கிறது..

அதன் சீற்றங்களே என்  அசைவுகள்..
அதன் சீற்றங்களே என் கேள்விகள்..
அதன் சீற்றங்களே என் புறக்கணிப்புகள்..
விஷம் கக்கும் என்னை
உன்னால் கொஞ்சமும்  அடக்க முடியவில்லை
எனக்கு புரிகிறது..
உனக்கும் அந்த நாகத்தின் பிம்பம் தெரிய தொடங்கிவிட்டது..
நீ கொஞ்சம் நடுங்கிக்கொண்டிருக்கிறாய்..
எனக்கு புரிகிறது..

மன்னித்து விடு..

அது உன்னை விழுங்கத்தான் போகிறது..
பின் என்னுள் அது வெடித்து 
என்னையும் அது அழிக்கத்தான் போகிறது..

மன்னித்து விடு..

தர்க்கங்களின் கைகளில்
நம் உறவை கொடுத்த நொடியில்
நாம் பிரிந்திருக்க வேண்டும்..
எனக்குள் இருக்கும் சிறு அன்பின் எச்சமே
எனது இந்த கவிதை..

மன்னித்து விடு..