சிறுமி  கையில் அவளது  மாட்டின்  கயிறு 
இழுவை என்று சொல்ல முடியாத சிறு சொடுக்கல் 
சொடுக்கல் என்று முடியாத சிறு இழுப்பு 
போதுமானதாக இருக்கிறது..
அவளது உள்ளங்கை அளவிலான 
அதன் கருவிழியை உருட்டி உருட்டி 
அத்தனை பெரு பச்சை மேய்ச்சலை 
அப்படியே விட்டுவிட்டு 
பாதி பசியையும் பெரு உடலையும் 
தள்ளியபடி 
அவளுடன் செல்கிறது 
அதன் மனம்..
தொலைத்துவிட்டேன் என்று தெரிந்த நொடியில்தான் 
நான் உறைந்திருக்கிறேன்..
நம்பிக்கையுடன் நான்தானே உன்னிடம் என்னை கொடுத்தேன்..
நீ தொலைத்து விட்டதை 
நான் எப்படி மீட்க முடியும்..
வேட்டையாடிய ஓநாயை 
பழக்கி கருணை பயின்று 
நாயென மாற்றி 
உன் பின்னே அலைய விட்ட வரைக்கும் சரி..
சுடும் வெயில் கோடையில் 
குப்பைமேட்டில் விட்டு சென்ற பின் 
மிரண்டிருக்கிறது அது..
கொஞ்சம் முயன்றால் ஓநாயாக மாறலாம்தான்..
உன் வாசத்தை மட்டும் தேடும் நாசியை 
தானே கீறிக்கொண்டிருக்கிறது..
நான் என்று ஆரம்பிக்கும் எந்த ஒரு வரியிலும் 
கவிதை விழுவதில்லை..
நான்-ஐ எழுதிவிட்டு வெறிக்கும் கவிஞன் 
வெகு நேரத்திற்கு பின் 
அதை அழித்து விடுகிறான்..
அழிக்கப்பட்ட நான்-களெல்லாம் 
நினைவில் ஒன்றை ஒன்று நோக்கி 
சலிப்புறுகின்றன..
இதுவைரை எதுவும் செய்ய வில்லை..
இனிமேலும் எதுவும் செய்ய போவதுமில்லை.
தெரிந்தும் முயற்சி என்ற பெயரில்
வாழ்ந்து கொண்டிருப்பவனின் 
நான்-கள் இரக்கமற்று குப்பையில் வீசப்படும் 
பின் அதுவே மக்கி அழியும்,..

ஒரு காடு 
மூச்சை இழுத்து விடும்
நிமிடங்களில்....
ஆம்..அப்படி நடக்கும் தானே?