முரண்

இத்தனை அன்பை நான்   அடைய 
இத்தனை பெரிய நோயை தாங்க வேண்டுமா?

இத்தனை கருணையை நான்  பெற  
இத்தனை தனிமையாய் இருக்க வேண்டுமா?

இத்தனை பின்னல்கள் என தெரிய 
கூட்டை கலைத்துதான் பார்க்க வேண்டுமா ?

உறவின் சாரம் அறிந்து கொள்ள 
அதை முறித்துதான் பார்க்க வேண்டுமா?

இன்னும் வலுவடைய 
இப்படி உடைத்துதான் கட்ட முடியுமா?

எல்லைகளை நான் அறிய 
இத்தனை தூரம்  கடந்து திணற வேண்டுமா?


சூரியனின் mid life crisis

இன்று சூரியன் எழவில்லை 
விடியாத காலையால்  மக்கள் பெரும் கோபமுற்றனர்.
சூரியன் ஏளனமாய் சிரித்தது..
இத்தனை நாள் தவறாமல் விடிய வைத்தவனுக்கு 
ஒரு நன்றி உண்டா?
ஒரு கரிசனம் உண்டா?
சிறிது நேர உரையாடல் உண்டா?
வியர்வையைத் துடைக்க ஒரு துண்டு உண்டா?
ஒரு மூலையில் உதித்து இன்னொரு மூலையில் மறையும் 
பைத்தியம் தானே நான்?
எனக்கு இன்றைக்கு உதிக்க மூட்  இல்லை..போங்கடா!

விடியா சூரியன் என்று எல்லோரும் அதற்கு பெயரிட்டனர்..
தவறாமல் விடியும் சூரியன் இருக்கும் விண் மண்டலத்துக்கு 
எப்படி குடி பெயர்வதென  ஆராய்ச்சி தொடங்கியது..
சூரியன் ஒரு அவசிய தேவை இல்லையென்று கோட்பாடுகள்  உருவாகின.
சூரியன் விழித்து கொண்டது.

அதன் பின் ஒரு நாளும் அது விடிய தவறவில்லை 
மிக மென்மையான கதிர்களை மட்டுமே அது பரப்பியது..
முதல் கதிர் விழும் போதே "காலை வணக்கம்" என்று சொல்லும் கதிர்கள்.
ஆம் சத்தம் எழுப்பும் கதிர்களை சூரியன் தந்தது..
பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டன..
இப்போதும் "காலை வணக்கம்" கதிர்கள் இருக்கின்றன..
ஆனால் எதனாலோ அது இன்னும் 
விடியா சூரியன் என்றே அழைக்க படுகிறது.

கசப்பு

 நான் ஒரு பென்சிலை திருடினேன்.
எனக்கு மூன்று நொடிகள் போதுமானதாக இருந்தது 
ஆனால் அந்த திருட்டு அத்தனை சீக்கிரம் நடக்கவில்லை 

திருட்டு என்பது வெறும் ஒரு செயல் இல்லை.

தனக்கு சொந்தமில்லாத பொருளின் மீது, ஒரு கள்ளத்தை
'ஆசை' என்று விதைக்க வேண்டும்  
 
அடுத்தவரிடம் இந்த ஆசையை மறைத்து வைக்க 
மனது புத்திக்கு சொல்கிறது - இது 'ரகசியம்' என்று 

அந்தபென்சில்  தனதென நினைத்து 
குதியாட்டம் போடும் மனம் - ஒரு மாய உலகை உருவாக்குகிறது  
அதில் நானும் அந்த பென்சிலும் மட்டும் இருக்கிறோம்.
இதுதான் என்னுடைய பென்சில்-வெர்ஸ் 

எனக்கு அந்த பென்சில் மீது பற்றுதல் இல்லை 
என்று ஒரு பாசாங்கை  அரங்கேற்ற வேண்டும் 
என் வாழ்வின் சில நிமிடங்கள் அந்த பென்சிலுக்காக 
இப்படி போலியாக வாழ  வேண்டும்.
 
அங்கு யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த 
அவர்களுக்கே தெரியாமல் அவர்களை கண்காணித்து  
என்மீதிருக்கும் அவர்களின் நம்பிக்கையை 
தவறாக பயன்படுத்தும் துரோகத்தை செய்ய வேண்டும் 

திருட்டு நடந்த இடம், நேரத்தில் நான் அங்கு இல்லையென்று 
ஒரு alibi-யை தயார் செய்து வைத்து கொள்ள வேண்டும் 

இத்தனையையும் நிகழ்த்திய பின்னர் 
இதெல்லாம் அந்த பென்சிலுக்கான உழைப்பென்று 
மனம் நம்பி விடும் 

அந்த மூன்று நொடிகள் வந்து விட்டன..
பதற்றம் இல்லாமல் இல்லை 
எல்லாம் சதியின் படி சரியாக இருக்கிறது..
பின்வாங்க எந்த அவசியமும் இல்லை 

எனதாகப்போகும் அந்த பென்சிலை பார்க்கிறேன்
ஒரு பெரும் பூதமென உருமாறி அது சொல்கிறது 
"நான் உன் உடைமை அல்ல" என்று.
அந்த பென்சில் பூதத்திற்கு என் முகம் தான்..
ஒரு கசப்பு மேலெழுகிறது 
நா வற்றல் 
வேர்க்கிறது 
மனம் சொல்கிறது "இதற்காக எத்தனை உழைத்திருக்கிறாய்.."

ஒரு பெருமூச்சின் இழுவையில் அந்த பூதத்தை சிதைக்கிறேன் 
அது ஒரு பாய்ச்சலுக்கான கணம் 
வெடுக்கென அந்த பென்சிலை எடுக்கிறேன் 
மனம் பேரின்பம் கொள்கிறது 
பெரிய சாதனை 
திரும்பி நடக்கிறேன் 

கசப்பு பரவுகிறது 
உடலில் சிறு கீறல் 
நான் நீங்கள் நினைக்கும் நான் தான் 
கள்ளத்தின்  சிறு கறை  மட்டும் சேர்ந்திருக்கிறது 
மற்றபடி நான் நானேதான். 
 
இன்னும் ஒரு உண்மையையும் சொல்கிறேன் 
இந்த சதியின் ஒவ்வொரு படியிலும் 
ஆசை, துரோகம், பாசாங்கு, களவு  என எல்லா படியிலும் 
"இதை செய்யாதே.. இதை செய்யாதே.." என்று கதறியது  ஒரு குரல்..
அது யாருடையது என்று தெரியவில்லை 
கொடிய விஷ கந்தலை 
போராடி வெளியேற்றிவிட்டேன் 
அமைதி கொள்கிறது மனம் 
சகிக்க முடியாத நாற்றத்தியும் 
பார்த்தவுடன் குமட்ட வைக்கும் கலவையை  கொண்டிருக்கிறது 
அந்த கந்தல்..
என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை வெறுப்புடன் பார்க்கிறார்கள் 
சூனியத்தை கக்கியவன் என்று விளிக்கிறார்கள்  
இப்படி ஏன் செய்தாய்?
உன்னால் எவ்வளவு பிரச்சனை!
எங்காவது போ..!
விஷம் இல்லாத நான் புத்தனென சிரிக்கிறேன்.
அவர்கள் மேலும் கோபமடைகிறார்கள்.
வசை. வசை.
உள்ளே விஷத்துடன் உழன்ற 
பகையும் கீழ்மையும் திருட்டும் சமைத்து சமைத்து 
பெருந்தனிமையுடன் கிடந்த எனக்கு 
எல்லா வசைகளும்  அன்பாக மாறுகின்றன 
நான் உங்களை முதல் முறையாக பார்க்கிறேன் 
எல்லோரும் அந்த விஷத்தை புதைப்போம் 
வாருங்கள்.
ஏனெனில் அது என்னுளிருந்த 
உங்கள் எல்லாருடைய விஷமும்தான்.

எல்லோரும் சமம் என்று சொல்லும் காட்சியில் 
மேடை இருக்கிறது 
பேச்சாளனுக்கு பத்தாயிரம்  இருக்கிறது 
பேச்சை கேட்க்கும் கூட்டம் 
அதற்க்கு மாதம் முப்பது 
சங்க கட்டணம் 
இருந்தாலும் எல்லோரும் சமம்.