நடுக்கம்

எனக்கு ஒரு மூன்று வயது  குழந்தை  இருக்கிறாள்..

நேற்று  நான் வண்ணங்கள் வைத்து ஏதோ  வரைந்தேன் 
இன்று  அவளும் வண்ணங்கள் வைத்து வரைந்தாள்.

நேற்று  நான் கோபத்தில்  கத்தினேன் 
இன்று அவளும் கோபத்தில் கத்தினாள் 

நேற்று  நான் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினேன் 
இன்று அவளும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினாள் 

நேற்று நான் பொய் சொன்னதை கண்டுபிடித்தாள் 
இன்று அவளே ஒரு பொய் சொன்னாள் 

நேற்று நான் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினேன் 
இன்று அவள் தேன்  சாப்பிட்டு உச்சு கொட்டினாள் 

இன்று நான் 
என்ன செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறேன்..
எல்லா மணங்களிலும் அதன் வேர்கள் 
நீக்கமற நிறைந்து வளர்ந்திருக்கிறது 
இத்தனை காலம் திளைத்த விஷத்தை 
வேரோடு முறிக்க ஒரு பேரன்பு தேவைப்படுகிறது.
சூரியனின் வெளிச்சத்தை போல்  சகல உலகுக்கும் 
பொதுவான ஒரு பேரொளி தேவைப்படுகிறது .
ஒரு சூஃபியின் ஆனந்தத்தை எல்லோருக்கும் பரப்பும் 
ஒரு பேரானந்தம் தேவைப்படுகிறது.
அன்பின் ஒரே அலைவரிசையில் எல்லோரையும் கோர்த்து 
நம் நாளங்களை மீட்ட ஒரு பெரும் இசை தேவைப்படுகிறது.
நாமெல்லாம்  சேர்ந்து நம்மை மீட்டெடுக்க 
ஒரு பெரும் அன்பியாக்கம் தேவைப்படுகிறது..

பந்தம்

மரத்திலிக்கும் ஒரு பழம் 
தன்னுள் ஒரு மரத்தையே வைத்திருப்பது தெரியாமல் 
காத்திருக்கிறது 
கைகளால் பறிக்கப்பட 
காற்றால் தள்ளப்பட 
அணிலால் கடிக்கப்பட  
பறைவையால் கொத்தப்பட .
பழம் என்பதை மறக்கும் பழம் 
கைகள் வளர்த்து 
கீழே குதித்து 
மண்ணில் புதைந்து 
வேர்கள் பரப்பி 
விருச்சமென வளர்ந்து 
உங்களுடன் போட்டியிடும் 

பீஃப் பிரியாணி

சின்ன மகன் பீஃப்   பிரியாணி கேட்டான் 
ஞாயிறன்று வீட்டு ஓனர் இருக்கமாட்டார் -  அதுதான் சரியான நாள் 
காலை எட்டு மணிக்கெல்லாம் 
ஏரிக்கரைக்கு அப்பால் இருக்கும்  குப்பை மேட்டின்  
அருகில் இருக்கும் இந்த ஊருக்கான மாட்டிறைச்சி கடையில்
ஒரு கிலோ வாங்க வேண்டும் 
பின், தெரு முனையில் இருக்கும் மளிகை கடையில் 
வெங்காயம் மிளகாய் மசாலா வாங்க வேண்டும்  
இல்லை இல்லை - முதலில் இறைச்சி வாங்கி 
பின்தெரு வழியாக வீட்டில் வைத்துவிட்டு, கைகால் கழுவி  
பின் மீண்டும் கடைக்கு போக வேண்டும், 
இறைச்சி வாசனை பிடிபட்டால் கடைக்காரர் முறைப்பார் 
பிரியானி  செய்து எல்லோரும் சாப்பிட்டவுடன் 
பாத்திரங்களை இரண்டுமுறை கழுவ வேண்டும் 
மாலையில் அம்மா வந்தால் முகம் சுளிப்பாள் 
பெரியவன் சொல்ல மாட்டான் 
சின்னவன் இன்னும் சின்னவனாகத்தானே இருக்கிறான் 



பனி விழும் முன் காலை வேளைகளில் 
கைகள் மட்டும் ஸ்பரிசித்து 
வெப்பமடையும்  
அன்பிற்கு பழகிய  உடல் 

அகராதி

அழுக்கு என்றால் துடைக்க தயார் 
எச்சில்  என்றால் கொஞ்சம் தயக்கம்.
தொடுதல், ஸ்பரிசம் என்பதிலிருக்கும் நேசத்தை 
தீட்டு என்று ஒதுக்கி வைப்பர் 
ஊர் என்று இருந்த மக்களை 
சேரி என்று தள்ளி வைத்தர் 
இறைச்சி என்று சுவைத்து வந்ததை 
கவுச்சி என்று கூறி முகம் சுளித்தர் 
படையலாய் அளித்து வந்ததை 
பிரசாதம் என்று சொல்லி தனியாய் வைத்தான் 


பிரிவினையின் நஞ்சை  அச்சில் வார்த்து 
மொழியின்  அகராதியில் ஏற்றி  
அங்கீகரிக்கும் மூடர்கள்..
 
 

உணவு ஏணி

சந்நிதியில் அர்ப்பணிக்கும் பிரசாதம் 
பெண் செய்ய தடை.. ஆண்  செய்ததே மேல்.
பிரசாதம் தான் மேல், மற்றவையெல்லாம் அதற்க்கு கீழ் 
சைவம் மேல், அசைவம் கீழ் 
சைவத்திலும், நிலத்தடி வளரும் காய்கள் கீழ் 
அதிலும் வெங்காயம் கீழ் 
வெங்காயம் சாப்பிடுவோருக்கு பூண்டு  கீழ் 
பூண்டு சாப்பிடலாம், சிலருக்கு முட்டை கீழ் 
முட்டையிலும் கோழி முட்டை சாப்பிடுவோருக்கு வாத்து முட்டை கீழ் 
முட்டை சாப்பிடுவோருக்கு இறைச்சியெல்லாம் கீழ் 
கோழி மட்டும் சாப்பிடுவோருக்கு மற்றவை கீழ் 
ஆடும் மீனும் சாப்பிடுவோருக்கு காடை, முயல் கீழ் 
இதுவரை சாப்பிட்டாலும் மாடு கீழ் தான்.
இதெல்லாம் சாப்பிட்டாலும் பன்றி கீழ் தான் 
அதற்க்கு கீழ் வரும் உடும்பும், எலியும், ஈசலும்..
எனதருமை உலக நண்பர்களே...
உணவு சங்கிலியைத்தானே நீங்கள் முன்மொழிந்தீர்கள்,
எங்களிடத்தில் ஒரு உணவு ஏணி இருக்கிறது பார்த்தீர்களா..
இந்த ஏணியில் நீங்கள் மேலே செல்லவே முடியாது 
வேண்டுமானாலும் கீழே சென்று வரலாம் - 
நிறைய அன்புடன்.

 நெடுஞ்சாலை நடுவில் பூத்திருக்கும் 
செவ்வரளியை பறிக்கும் பெண்ணொருத்தி 
அத்தருணத்தில் சட்டையணிந்திருக்கிறாள்..
வீட்டிற்கு சென்று சூடிக்கொள்ளும்போது 
தாவணிக்கு மாறுவாளோ?