பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

எனக்கும் உனக்கும் உள்ள நேரம்
மூன்றே நிறுத்தங்கள்..
இடைவெளியாய் சில கம்பிகள்..
கைமாறிய சில்லறைகளில் என்  ஸ்பரிசங்கள்..
திரும்பிய பயனசீட்டுகளில் உன் வெட்கங்கள்..

நான் ஏறும்பொழுதில் உன் ஓரக்கண் பார்வை..
பூக்கடை நிறுத்தத்தில் மலர்ந்து விடைகொடுப்பாய்..
அந்த ஒரு நாளில் ஒரு நிறுத்தம் முன்னதாக ஏறி
காதலை சொன்னேன்..
ஒரு நிறுத்தம் தள்ளி இறங்கி
சம்மதம் சொன்னாய்..

நீ ஓயாமல் பேசிய பெண்மணி
என் மதனி என்று ஜாடை காட்ட - உன் நாணத்தில் உடைந்தது
நம் குட்டு..
இன்று ஒரே நிறுத்தத்தில் ஏறும் நாம்
புதிதாய் விடப்பட்டிருக்கும் PP வண்டியில் செல்லாது
நம்  பேருந்திலேயே தொடர்கிறோம்..
அப்படியே இருக்கின்றன
பயணச்சீட்டுகளும், சில்லறைகளும்..

கதை... கவிதை...காவியம்..

ஒவ்வொரு துளியும் ஒரு கவிதை
நதியின் பாதையில் பல சிறுகதைகள்
முடியாத காவியமாய் கடல்..

ஒவ்வொரு பூவும் ஒரு கவிதையாயின்
எழுதப்படாதவை எத்தனை மரங்களின் கதைகள்...?

ஒவ்வொரு பார்வையும் ஒரு கவிதயாயின்
எத்தனைகோடி சிறுகதைகள் நிமிடங்களில்?
உலகமென்னும் காவியத்தை
இயக்கும் சக்தி எதுவாக இருக்கும்?
கடவுளேன்பார்,  அன்பென்பார் - நான் சத்தியமென்கிறேன் ..

மழையின் அடையாளங்கள்...

மழை மட்டும் பேசிக்கொண்டிருந்த பின்னரவில்..
தூரத்து தெரு விளக்கு நீள்கோடாய் விழுகிறது சாலையின்  மேல்..
அதை  சலனத்துடன் ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது
மழை..

அவசரமாய் நிழல் குடையில் ஒதுங்கியவன்
மழையை திட்டி ஓய்ந்து போனான்...
கைகள் நீட்டி, தூறல் ரசித்து, முகம் கழுவி
திடீரென  இறங்கி நடக்க ஆரம்பித்தான் - அழகாக..

பத்து நிமிடங்களில் நின்று விட்டது மழை -
அடையாளமாய் -
மண் வாசனை..

சாலை குழிகளில் தேங்கினிர்க்கிறது மழைநீர்..
ஒவ்வொரு குழியாய் சென்று கால் நனைக்கும் சிறுமி - கைபிடித்து
இழுத்து செல்கிறாள் அப்பாவையும்..
இதில் யாரழகு ?

நனைய நினைத்தும் முடியாமல் போகிறவர்கள்
மழையை ஸ்பரிசிக்கிரார்கள்
குடை பிடித்துக்கொண்டே ஒரு கை நீட்டி

மழையை தவறவிட்டவர்களுக்கு கண்டிப்பாக கிடைத்துவிடுகிறது
நடைபாதை மரமும்
சிலுப்பிவிட தென்றலும்..

ரகசியம்...

நண்பனிடத்தில் சொல்லும் ரகசியம்
ரகசியமாகவே புதைகிறது..
நண்பனிடமும்  சொல்ல முடியாத ரகசியம்
பாவமாக புதைகிறது..

உள்நாட்டு ரகசியம் 
ஊர் ரகசியம்
தெரு ரகசியம்
வீட்டு ரகசியம்
என்ற பெயரில் சமூகத்தின் அடுக்குகளில்
பாவ மூட்டைகள் பரவி கிடக்கின்றன..
 
ரகசியம் பரிமாறிக்கொள்ளும் கூட்டத்தில்
எல்லோரும் வருகிறார்கள்
முகமூடி அணிந்து...