தோற்றுப்போன போரிலிருந்து 
ஊர் திரும்பும் கடைநிலை போர் வீரன் 
உலர்ந்த பசியேறிய பயணத்தில் 
தன் பொறுப்புகளை பட்டியலிட்டுக்கொள்கிறான் 
தங்கள் தளபதி  வீழ்ந்ததை 
வீரத்தோடு சொல்லும் காட்சிகளை குறித்துக்கொண்டான்.
காயமடைந்தவர்களை தூக்கி சென்றதில் அவன்மேல் அப்பிய 
ரத்த கறைகள் போதுமானதாக இருக்கிறன..
இறந்தவானின்  வாளை யாருக்கும் தெரியாமல்  
மாற்றியாகி விட்டது. அதிலுள்ள ரத்தமும் இவன் வீரம் சொல்லும்.
இரண்டு வீரர்களின் கடைசி சொற்களை 
அவரது குடும்பங்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும்.
வீட்டுக்கு போகும் முன் கடையிலிருந்து ஒரு மிட்டாய் பொட்டலம் 
கண்டிப்பாக வாங்க வேண்டும்.

பூரணம்

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

பார்க்காத 
நிலவின் முதுகு 

விரட்டிவிடப்பட்ட 
பிச்சைக்காரனின் பசி 

படகில் செல்பவனுக்கு 
கடலை காட்டும் வெளிச்சம் 

நேற்று கவனித்த பூவின் 
இன்றைய வாடல் 

உச்சமடையும் முன்பிருக்கும்  
காமத்தின் நித்தியம்  

எரிமலைபிழம்பை  ஒரு கரண்டி எடுத்து 
ஊதி ஊதி உருண்டை பிடித்து - உரமாய் அளிக்கும்  
ஆதி தாயின் கருணை 

இல்லாத நுண்ணுயிர்கள் 
உடலை இல்லாமல் ஆக்கும் நடனம் 

ஒரு மழைத்துளி பல இலைகளில் சரிந்து சரிந்து 
நிலத்தின் விழுந்து வெடிக்கும்  சத்தம் 

நீ கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற தேவதைகளின்
 துர் ஓலம் 

உன் இருப்பின் 
சகல சாத்தியங்களையும் 
உனக்கு காட்டும் பூரணம் 

கவிதை என்பது விட்டுப்போனவற்றின் அடைக்கலம் 

அரப்பு

பனி பொழியும் குளிர்ந்த மாலையில் 
சாலையோரம் அமர்ந்திருக்கும் பெண்ணொருத்தி 
என் அம்மாவின் அரப்பு கலர்  புடவையை அணிந்திருக்கிறாள். 
நீண்ட கயிற்றில் இழைகள் பிரித்து பிரித்து 
முடுச்சிட்டு கொண்டிருந்தாள் 
எதற்கும் பிறழாத அவளது உலகம் 
முடுச்சுகளால் நிரம்பியிருக்குமென நினைக்கிறேன் .
பட்டு, ஜரி, காட்டன், வாயில் என தரம் பிரித்து 
பகிர்ந்து கொள்ளப்பட்டவைகளில் 
கைகள் மாறி மாறி 
இவளை அடைந்திருக்கும்  
கழித்து கட்டப்பட்ட இந்த அரப்பு கலர் - 
இழப்பை துளிர்க்கச்செய்கிறது 


வெயில் கவிதை

பந்தை  எடுத்த சிறுவன் 
கூடவே உருண்டுவந்த அதன் நிழலை 
தேடிக்கொண்டிருக்கிறான்