பிணம் இன்னும் வரவில்லை

ஒரு வீட்டை இழவுக்கு தயார்படுத்துதல் 
என்பது 
அந்த வீட்டின் அத்தனை சந்தோஷங்களையும் களைந்து 
ஒரு தனி அறையில் பூட்டி விடுவது..
அந்த வீட்டின் கடவுள்களை தண்டிக்க 
படங்களை சுவரோரம்  திருப்பி வைப்பது.. 
"எந்த திசையில் தலை விளக்கு வைக்க வேண்டும்?" என்ற
கேள்வியின் எதார்த்தில் கொஞ்சம் சுதாரிப்பது..
வரும் அத்தனை பேர்களில் 
ஒரு சிலருக்காக மட்டும் அழுகையை தேக்கி வைப்பது..
ஒரு மகிழ் தருண புகைப்படத்தை கொடுத்து 
இறப்பின் முகமாக மாற்றும் கொடூரத்தை 
தன் கையாலேயே நிகழ்த்துவது...
இப்போது தேவைப்படும் முக்கிய குறிப்பொன்றை தேடி 
அதை இறந்தவரிடமே கேட்க நினைத்து 
பின் அவரது இல்லாமைக்கு பழகுவது..
சொல்லாமல் விட்டுப்போன எளிய சொற்களை நினைத்து 
கழிப்பறையில் தண்ணீரை வெறுப்பது..
கேட்கவில்லை என்பதற்காக செய்யாமல் விட்ட உதவிகளை 
ஒவ்வொன்றாய் கோர்த்து கண்ணுக்குள் குத்திக்கொள்வது..

இன்னும் இரண்டு நாட்களில்
அவரின் உயிர் பிரிந்துவிடும் என்று சொல்லிவிட்டார்கள்
இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
இல்லாமல் போகப்போகும் இந்த உயிரை 
அது இல்லாமலே போவதற்குள் 
லேசானதாக மாற்ற 
நான் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?

கொஞ்சம்  நெகிழ்ந்திருக்கிறேன் 
வேறு  எதுவுமே நடக்கவில்லை இத்தருணத்தில் 
லாலிபாப்பை  சாப்பிடும் குழந்தையைப்போல 
இந்த நொடிகளை - 
வழிய வழிய குதப்பிக்கொண்டிருக்கிறேன்  

 
வீட்டை காலி செய்தாயிற்று 
கடைசியாக பூஜையறையை  பார்த்து வணங்கினார் 
அங்கு வேறெதுவும் இல்லை - காலிதான்