சோகத்தை மறைக்காதே நண்பா

 அவள்தான் முதலில்  பிரிவை அறிவித்தாள் 
அது ஒரு பேரிடியாய் இருக்குமென்று இவன் எண்ணினான் 
அழ முற்பட்டான் 
தலை சுற்றல் எதுவும் இல்லை.
எதிர் வந்த லாரியை பார்த்து தற்கொலை செய்ய வேண்டுமா 
என்று அவனே கேட்டு..ச்சீ  என்று விட்டுவிட்டான்..
அவள் பிரிந்ததை விடவும் 
அந்த பிரிவு எந்த ஒரு பெரிய சோகத்தையும் 
அவனுக்கு தரவில்லை என்பது வெறுப்பாய் இருந்தது.
உணவு, உடை, உறக்கம், மணம், சுவை எல்லாம் 
சரியாக வேலை செய்தது..
நண்பர்களிடம் சோகமாக முகத்தை வைத்து கொண்டான் 
அவர்களின் ஆறுதல்களை ஏற்றுக்கொண்டான்
தன்னை மறந்து கொஞ்சம் சிரித்துவிட்டாலும் 
நண்பன் சொன்னான் "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..

அவன் பார்த்த திரைப்படங்கள், கதைகள், கவிதைகள்
எல்லாவற்றையும் திட்டினான்..
சத்தமாய் கத்தினான் - காதல் என்பது 
இந்த உலகமே ஏற்றுக்கொண்ட பெரும் பொய்..
நண்பன் மீண்டும் சொன்னான்  "சோகத்தை மறைக்காதே நண்பா" என்று..
"நீ காதலித்திருக்கிறாயா?" 
"ஆம்..மூன்று முறை.." என்றான் நண்பன்.
"பிரியும்போது உனக்கு சோகமாக இருந்ததா?" 
"பெரிதாக இல்லை" 
"அப்போ எல்லாம் போய் தான?" - இவன் சொன்னான்.
"அப்போ சேர்ந்திருந்தப்போ நீ சந்தோஷமா இல்லையா?" நண்பன் கேட்டான்.
"இருந்தேன்.." 
"அப்போ அது உண்மையில்லயா ?" 
".."

இப்போது இவன் 
சேர்ந்திருக்கும்போது சந்தோஷத்தை தருகிற 
பிரியும்போது சோகத்தை தராத 
தனது அடுத்த காதலுக்காக 
காத்திருந்தான்..

கருத்துகள் இல்லை: